மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் புதிய பரபரப்பாக பாஜகவை சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திடீரென சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மீது டெல்லி மேலிடம் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றியது. இதனையடுத்து புதிய ஆட்சி அமைப்பதற்கு முயன்ற பாஜகவுக்கு மிகப் பெரும் முட்டுக்கட்டையாக இருந்தவர் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் ஷிண்டே. முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்ததால் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு சமாதானப்படுத்தினார்.
இதனையடுத்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர். ஆனால் அமைச்சரவை விரிவாக்கத்திலும் ஷிண்டே மீண்டும் முட்டுக்கட்டை போட்டார். சபாநாயகர் பதவி, உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தார் ஷிண்டே. இதனை பாஜக மேலிடம் துளியும் விரும்பாமல் அதிருப்தியை வெளிப்படுத்தியது. பின்னர் ஒருவழியாக மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போதும் மகாராஷ்டிரா அமைச்சரவை தொடர்பாக பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
இன்னொரு பக்கம், மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்தது. இந்த தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான இந்த மகா விகாஸ் அகாடியை விட்டு வெளியேறுவதில் உத்தவ் தாக்கரே சிவசேனா முனைப்புடன் இருக்கிறது. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் வரும் நிலையில் உத்தவ் தாக்கரே சிவசேனா தனித்தே போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டும் வருகிறது. அதேபோல இந்தியா கூட்டணிக்கான தலைமையை காங்கிரஸிடம் இருந்து மாற்ற வேண்டும் என்பதையும் உத்தவ் தாக்கரே சிவசேனா வலியுறுத்தி வருகிறது. உத்தவ் தாக்கரே சிவசேனா எந்த நேரத்திலும் இந்தியா கூட்டணி, மகா விகாஸ் அகாடியைவிட்டு வெளியேறிவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த அரசியல் பின்னணியில் நாக்பூரில் நேற்று திடீரென முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். சிவசேனா என்ற கட்சியையே சிதைத்து சின்னாபின்னமாக்கி ஆட்சியையே கவிழ்த்த பட்னாவிஸை உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசிய நிகழ்வு பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே கூறுகிறார்.
ஆனால், பாஜகவை தொடர்ந்து வெறுப்பேற்றும் வகையில் நடந்து கொள்ளும் ஏக்நாத் ஷிண்டேவை அச்சுறுத்த அல்ல வெளியேற்ற உத்தவ் தாக்கரே சிவசேனாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கிவிட்டது பாஜக. இதன் முதல் கட்டம்தான் உத்தவ் தாக்கரே- பட்னாவிஸ் சந்திப்பு. இதனால் மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுவிட்டது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். பட்னாவிஸ்- உத்தவ் தாக்கரே சந்திப்பு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.