சென்னை: சென்னை வேளச்சேரி 9 மாடி கட்டடம் தீப்பிடித்து எரிந்த நிலையில் அதில் சிக்கிய 2 தொழிலாளர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கையில் தூக்கிக்கொண்டு ஓடி சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே தான் அவர்கள் 2 பேரையும் பத்திரமாக மீட்டது எப்படி? என்பது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் அருகே புதிதாக அடுக்குமாடி கட்டடம் என்பது கட்டப்பட்டு வருகிறது. வேளச்சேரி -தாம்பரம் மெயின் ரோட்டில் சென்னை சில்க்ஸ் அருகே இந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டடம் மொத்தம் 9 தளங்களை கொண்டுள்ளது. தரை தளத்துடன் சேர்த்தால் இந்த கட்டடம் என்பது 10 தளங்களாகும். தற்போது 80 சதவீத அளவிலான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் என்பது நடந்து வருகிறது. இன்றும் அந்த கட்டடத்தில் சில தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
இந்நிலையில் தான் இன்று மாலையில் திடீரென்று அந்த கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதாவது சுமார் 5 மணியளவில் திடீரென கட்டடத்தின் ஒரு தளம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.
இதற்கிடையே தீ அடுத்தடுத்த தளங்களில் வேகமாக பரவியது. இதனால் 9 மாடி கட்டடமும் வேகமாக தீப்பற்றி எரிய தொடங்கியது. இதையடுத்து மேல்தளத்தில் பணியாற்றிய 2 தொழிலாளர்கள் கட்டடத்துக்குள் சிக்கி கொண்டனர். தரைதளம் முதல் மேல்தளம் வரை அனைத்து இடங்களும் தீப்பற்றி எரிந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதையடுத்து அவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள மொட்டை மாடிக்கு சென்றனர்.
இதுபற்றி உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 8 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பிற தொழிலாளர்கள், 2 பேர் கட்டடத்தின் மேல்பகுதியில் சிக்கி இருப்பதை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்கள் மேலே சிக்கிய தொழிலாளர்களுடன் செல்போனில் பேசினர்.
அப்போது அவர்கள் தங்களை எப்படியாவது காப்பாற்றிவிடும்படி கதறினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ‛ஹை லிப்ட்' மூலம் சென்று உயிருக்கு பயந்து மொட்டை மாடியில் தஞ்சமடைந்த 2 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர். அதன்பிறகு அவர்களை கையில் தூக்கியபடி மருத்துவ சிகிச்சைக்கு தீயணைப்பு வீரர்கள் ஓடினர்.
இதற்கிடையே கட்டத்தில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் உள்ள கண்ணாடியை கல்வீசி உடைத்தனர். இந்த வேளையில் 2 தன்னார்வலர்கள் காயமடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது தீவிபத்து நடந்து 2 மணிநேரத்தை தாண்டிய நிலையில் இன்னும் தீ என்பது முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கண்ணாடி உடைக்கப்பட்ட பகுதியின் வழியாக ஹைலிப்ட் வாகனத்தின் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சியடித்து வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் வேளச்சேரியில் அந்த கட்டடம் உள்ள பகுதி என்பது கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிய அளவில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இருப்பினும் தற்போதைய சூழலில் அந்த 9 மாடி கட்டடத்தில் எப்படி தீவிபத்து ஏற்பட்டது? என்பது உடனடியாக தெரியவில்லை. முதலில் கட்டடத்தில் பிடித்த தீயை அணைத்த பிறகு தீவிபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.