குடும்ப அட்டைக்கு ரூ. 5 ஆயிரம்.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக.. குரல் கொடுத்த திருமா

post-img
திருச்சி: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் பலத்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க தேவையான நிவாரண உதவியை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டது. ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். மழை, வெள்ள நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகள், பொருள் சேதம் உள்ளிட்டவை குறித்து கணக்கீடு நடத்தப்பட்டு அவற்றுக்கேற்ப நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். மத்திய அரசு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை நிறைவேற்ற பார்க்கிறது. பாஜக அரசு இந்திய அரசமைப்பு சட்டத்தைப் போற்றி புகழ்ந்து கொண்டே அரசமைப்பு சட்டம் மீது மூர்க்கமான தாக்குதலை நடத்தி வருகிறது. ஏற்கனவே 370 வது சட்டப் பிரிவை நீக்கினார்கள், சிஏஏ சட்டத்தை கொண்டு வந்தார்கள். இவையெல்லாம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானவை. தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இந்த ஆபத்தை தடுக்க அனைவரும் அணி திரள வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. ஆனால், அரசமைப்பின் அடிப்படை கூறுகளில் கை வைக்க கூடாது. அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் உள்ளது. இன்று பாஜக அரசு தேர்தல் ஆணையத்தையே கேள்விக்குள்ளாக்கி அதன் அதிகாரத்தையே பறிக்கிறது. அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர பார்க்கிறார்கள். பகுதி பகுதியாக தேர்தல் நடத்துவதே தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் மீது சுமத்தப்படும் பாரம் பொருளாதார விரயத்தையும், நேர விரயத்தையும் கட்டுப்படுத்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வருகிறோம் என்பது அப்பட்டமான பொய். அதிபர் ஆட்சி முறையை, ஒரே கட்சி ஆட்சியைக் கொண்டு வர வேண்டும், மாநில கட்சிகள் சிதைக்கப்பட வேண்டும் என்கிற உள்நோக்கத்தில் கொண்டு வரப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட கூடிய அரசை யாரும் கேள்வி எழுப்பக் கூடாது. அந்த 5 ஆண்டுகாலம் என்பதை உறுதிப்படுத்த பார்க்கிறார்கள். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம். தற்பொழுது உள்ள ஜனநாயகம், எந்த நேரத்திலும் கேள்வி எழுப்பலாம் என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் கூட்டணிக் கட்சிகளின் தயவே இல்லாமல் அவர்கள் ஆட்சி அமைக்கலாம். எதிர்க்கட்சிகள் யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படியொரு நிலையைதான் அமெரிக்காவில் இருப்பதுபோல கொண்டுவர பார்க்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு அரசமைப்பு சட்டத்துக்கும் மிகவும் ஆபத்தானது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

Related Post