அடுத்த ஷாக்.. தலித் பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை.. மகன் அடி

post-img

போபால்: மத்திய பிரதேசத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை வாபஸ் பெறக்கோரி அவரது சகோதரரை அடித்துக்கொன்ற கும்பல், அவரது தாயாரை நிர்வாணமாக்கி கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவில் தலித் சமுதாய மக்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் கூட ஆங்காங்கே தலித் சமுதாய மக்கள் துன்புறுத்தப்படுவது நடந்து வருகிறது.


அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுப்பதோடு, நெஞ்சை பதற வைப்பது போல் உள்ளது. அதுபற்றிய திடுக்கிடும் தகவல் வருமாறு:
மத்திய பிரதேச மாநிலம் சார் மாவட்டம் பரோடியா நானார்கிர் கிராமத்தை சேர்ந்தவர் விக்ரம் சிங் (வயது 28). இவர் அந்த பகுதியில் வசித்து வரும் தலித் சமுதாயத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளம்பெண் சார்பில் விக்ரம் சிங் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து விக்ரம் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2019 ல் நடந்தது.


இதையடுத்து விக்ரம் சிங் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு அவர் தலித் குடும்பத்தினரிடம் தனக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்கும்படி தொடர்ந்து கூறியுள்ளார். ஆனால் அவர்கள் வாங்க மறுத்துள்ளனர். இதனால் விக்ரம் சிங் கடும் கோபமடைந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் விக்ரம் சிங் தனது குடும்பத்தை சேர்ந்த சிலருடன் அந்த தலித குடும்பம் வசிக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு பாதிக்கப்பட்ட பெண் தனது தாயுடன் இருந்தார். அவர்களிடம் வழக்கை வாபஸ் பெறும்படி விக்ரம் சிங் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து விக்ரம் சிங் மற்றுமு் அவருடன் சென்றவர்கள் வீட்டை சூறையாடிவிட்டு அங்கிருந்து சென்றனர். அப்போது அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரான 20 வயது இளைஞர் நின்றார்.


இதை பார்த்தவர்கள் அவரிடமும் வழக்கை வாபஸ் பெறும்படி கூறியுள்ளனர். அவரும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆக்ரோஷமான அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. இதற்கிடையே அங்கு அவரது தாயார் வந்தார். மகனை காப்பாற்ற அவர் முயன்றார். இந்த வேளையில் அந்த கும்பல் அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியதோடு அவரது மகனை தொடர்ந்து கொடூரமாக தாக்கிவிட்டு சென்றது.


இதையடுத்து அங்கிருந்தவர்கள் பெண்ணை மீட்டனர். மேலும் ரத்தத்தில் பேச்சு, மூச்சு இன்றி கிடந்த இளைஞரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். மேலும் அந்த இளைஞரின் தாய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்த புகாரின் போலீசார் விக்ரம் சிங் உள்பட 9 பேர் மீது கொலை, பாலியல் தொல்லை, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஒருவர் தலைறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Related Post