திருப்பதியில் கனமழை! ஏழுமலையான் கோயில் மாட வீதியில் ஆறு போல் ஓடும் நீர்! குளிரால் பக்தர்கள் நடுக்கம்

post-img
திருப்பதி: திருமலை திருப்பதியில் கனமழை பெய்து வருவதால் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அது போல் மழையால் சுவாமியை பார்த்துவிட்டு வெளியே வந்த பக்தர்களும் தங்கள் அறைகளுக்கு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருப்பதி கோயில் முன்பு கெண்டை கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கனமழை பெய்து வருவதால் பக்தர்கள் குளிரால் வாடினர்.அன்னதானக் கூடம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையில் நனைந்த படியே பக்தர்கள் சென்று சாப்பிடும் நிலை உள்ளது. திருமலையில் பாபநாசம், ஸ்ரீவாரி பாதம் உள்ளிட்ட பகுதிகள் மலைப்பாங்கான பகுதிகள் என்பதால் அங்கு பாறைகள் சரிய வாய்ப்புகள் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கனமழையால் பக்தர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் கால் டாக்சி டிரைவர்களும் வாடிக்கையாளர்களை சுற்றியுள்ள ஊர்களுக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். தெற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்தமாக தீவிரமடைந்துள்ளது. இது இலங்கை- தமிழகம் இடையே மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்கிறது. இதனால் தமிழகம், தெற்கு ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று தமிழகத்தில் 23 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று காலை முதலே கனமழை பெய்து வந்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய மழை அதிக ஓசையுடன் கொட்டித் தீர்த்து வருகிறது. அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்கிறது. விட்டு விட்டு பெய்தால் அதிக அடர்த்திக் கொண்டதாக பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் திருமலை திருப்பதியிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கீழ் திருப்பதியிலும் மேல் திருப்பதியிலும் கனமழை கொட்டி வருகிறது. மலை பாங்கான பகுதி என்பதால் திருமலையில் மேடும் பள்ளமுமாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மழை நீரானது பள்ளமான இடங்களுக்குச் சென்றுவிட்டது. மேடு பள்ளம் தெரியாமல் பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். தரிசன பாதைகளில் வரிசைகளிலும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் காத்திருப்பதால் வழியெங்கும் தண்ணீராக இருக்கிறது. பெரும்பாலும் திருமலை திருப்பதியில் உணவகங்கள் ரோட்டு கடைகள் என்பதால் சாலையோரம் நின்று சாப்பிட யாரும் வராததால் உணவக உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Post