ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் உள்ளே செல்ல முடியாது. எப்படி செல்லலாம். அவரை எல்லாம் உள்ளே அனுமதிக்க கூடாது என்று ஜீயர்கள் கோஷம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மிகவும் பிரபலமானது. இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார் மற்றும் அவரது வளர்ப்பு மகளான ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்களின் பிறப்பிடமாக இது கருதப்படுகிறது. இக்கோயில் மதுரையிலிருந்து 80 கி.மீ. பழங்கால திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆகும்.
கிபி 6-9 ஆம் நூற்றாண்டுகளில் ஆழ்வார் மகான்களின் ஆரம்பகால இடைக்கால தமிழ் நியதியான நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இந்த கோவில் மகிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டாளின் வாழ்க்கையுடன் நெருக்கமாக இக்கோயில் தொடர்புடையது. கோயிலின் பிரதான தெய்வத்தின் அருளால் ஆண்டாளுக்கு இங்குதான் மாலை கிடைத்ததாக வரலாறு உண்டு. அதாவது விஷ்ணுவிற்கு அணிவிக்க வேண்டிய மாலையை முதலில் ஆண்டாள் இங்கே அணிந்ததாக புராணம் கூறுகிறது. அதன்பின் விஷ்ணு பெரியாழ்வார் அவரது கனவில் தோன்றி, ஆண்டாள் அணிந்திருந்த மாலையை தனக்கு தினமும் அர்ப்பணிக்கும்படி கேட்டதாக நம்பப்படுகிறது, இது நவீன காலத்தில் பின்பற்றப்படும் நடைமுறையாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலின் ரங்கநாதர் ஆண்டாள் என்பவரை மணந்ததாகவும், பின்னர் அவருடன் இணைந்ததாகவும் நம்பப்படுகிறது.
வழிபாடு: இப்படிப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் நுழைந்தபோது அவர் தடுக்கப்பட்ட நிலையில் அவர் வெளியேறி உள்ளார்.
அதன்படி அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அங்கே இருந்தபடியே வழிபாடு செய்துள்ளார். அதன்பின் அங்கிருந்து வெளியேறி உள்ளார்.
என்ன நடந்தது?: கோவில் கருவறைக்குள் குறிப்பிட்ட ஜாதியில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது, அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக ஜீயர்கள் முறையிட்டு உள்ளனர்.
அவர் உள்ளே செல்ல முடியாது. எப்படி செல்லலாம். அவரை எல்லாம் உள்ளே அனுமதிக்க கூடாது என்று ஜீயர்கள் கோஷம் போட்டுள்ளனர். அதோடு அவரை வெளியே செல்லும்படி கூறிய ஜீயர்கள் அங்கேயே முறையிட்டு உள்ளனர். பின் கருவறையில் இருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்தார் இளையராஜா. கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வேகவேகமாக அங்கிருந்து கிளம்பி சென்றார்.
முன்னதாக அவர் கிளம்பும் முன் கோவில் நிர்வாகிகள்.. கோவில் விதிப்படி நீங்கள் உள்ளே செல்ல முடியாது. அந்த படி வரை மட்டுமே செல்ல முடியும். அதை தாண்டி செல்ல முடியாது. அதற்கு அனுமதி அளிக்க மாட்டார்கள் என்று விளக்கம் அளித்தனர்.
கோவில் பிரசித்தி பெற்றது: இக்கோயிலில் இரண்டு பிரிவுகள் உள்ளன - தென்மேற்கில் ஆண்டாள் ஸ்தலம் ஒன்றும், வடகிழக்கு திசையில் உள்ள வடபத்ரசாயி இரண்டாவது பிரிவும் உள்ளது. இதில் தென்மேற்கில் ஆண்டாள் ஸ்தலத்தில் இளையராஜா வழிபடும் போதுதான் இந்த சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. கோயிலைச் சுற்றி ஒரு கருங்கல் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. கோவிலின் அனைத்து சன்னதிகளையும், ஆண்டாள் பிறந்ததாக நம்பப்படும் தோட்டத்தையும் வழிபட மக்கள் ஆயிரக்கணக்கில் அங்கே வருவது உண்டு. விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்கள் கோயிலின் சன்னதியின் சுவர்களில் வரைந்த ஓவியங்கள் இங்கே மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.