சென்னை: தங்கம் விலை 2024ம் ஆண்டு சுமார் 40 முறை, புது புது உச்சங்களை தொட்டதை அறிந்திருப்பீர்கள். இவ்வாண்டு நவம்பர் வரையிலான விலை உயர்வை வைத்து பார்த்தால், தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் 28% லாபம் பெற்றுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் தங்கம் இவ்வளவு அதிக லாபத்தை தந்தது இதுவே முதல் முறை என உலக தங்க கவுன்சில் (world gold council) தெரிவித்துள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகள், போர், பணவீக்கம் போன்ற காரணிகள் தங்க விலையை புதிய உச்சத்தை நோக்கி நகர்த்தியிருந்தன.
2024ல் பல நாடுகளின் மத்திய வங்கிகள் பெருமளவில் தங்கத்தை வாங்கியதும் தங்கம் விலை உயர்வதற்கு காரணமாக அமைந்தது. உலகளாவிய அளவில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, மக்களை தங்கத்தில் முதலீடு செய்யத் தூண்டியது. ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தங்கம் விலை எதிர்பாராத வகையில் குறைந்தது.
கடந்த 45 ஆண்டுகளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாற்றை ஆய்வு செய்தால், 2024ல் இந்த இரண்டுமே மிக அதிக வளர்ச்சியை அடைந்திருப்பதை காணலாம். இது முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும், பொது மக்களான நுகர்வோருக்கு அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. இதே காலகட்டத்தில் வெள்ளி 36% க்கும் அதிகமான லாபத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், 2025ல் தங்கம் விலை மேலும் குறையுமா, அல்லது கூடுமா, எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து உலக தங்க கவுன்சில் ஒரு தகவலை (gold rate prediction for 2025) சமீபத்தில் தெரிவித்தது. அதன்படி, 2025ல் தங்கம் விலை, வேகமாக இல்லாமல், மிதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் செய்யப்போகும் வணிக வரி விதிப்பு மாற்றங்கள், பொருளாதார கொள்கைகள் போன்றவை, தங்கம் விலையை உயர்த்தப்போகும் காரணிகள் என்று கணிக்கப்படுகிறது.
கடந்த 10 வருடங்களில் தங்கத்தின் விலை ரொம்பவே அதிகரித்துள்ளது. உதாரணமாக, 2014-ல் 10 கிராம் 24 காரட் தங்கத்தை வாங்க 29,462 ரூபாய் செலவானது. ஆனால், 2024 அக்டோபரில் அதே 10 கிராமை வாங்க 82,000 ரூபாய் செலவானது. அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ம் தேதிக்கு பிறகு, தங்கள் நாட்டு பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கவும், மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் பல நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார். அந்த நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பதை பொறுத்துதான், தங்கம் விலை எப்படி உயரும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது. இந்த போர் மேலும் தீவிரமானால், தங்கத்தின் விலை இன்னும் அதிகமாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். போர் நடந்தால், உலகின் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகமாக வாங்கத் தொடங்கும் என்பதுதான் விலை உயர்வுக்கு காரணம். ஏன் என்றால், தங்கத்தின் விலை எப்போதும் உயர்ந்து கொண்டே இருக்கும் என்பதால், இது ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. குறிப்பாக, உலகில் பொருளாதார நிலைமை சரியில்லாத போது, மக்கள் தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பது வழக்கம்.