காஸா: ஹமாஸ் பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியான பாலஸ்தீனத்தின் காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்ததில் அம்மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த துயரத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன அரசு 3 நாள் துக்கம் கடைபிடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த 7-ந் தேதி பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள், வெளிநாட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனையடுத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஜிஹாதிகள்- இஸ்ரேல் இடையேயான யுத்தம் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் 11 நாள் யுத்தத்தில் இதுவரை சுமார் 5,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த யுத்தம் உலகப் போராக உருமாறக் கூடிய சர்வதேச சூழ்நிலை அதிகரித்தும் வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஏற்கனவே களமிறங்க படைகளை அனுப்பி வருகிறது. பிரான்ஸும் அமெரிக்காவை பின்பற்றி படைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறது.
இதனிடையே காஸா பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற கெடு விதித்திருந்தது. காஸா மீது இஸ்ரேலிய முப்படைகளும் தாக்குதல் நடத்தும் என்பதால் இந்த கெடு விதிக்கப்பட்டிருந்தது. பல லட்சம் பேரை எப்படி பாதுகாப்பாக வெளியேற்ற முடியும்? அதுவும் குறுகிய கால கெடுவுக்குள் என சர்வதேச அமைப்புகள் தலையிட்ட நிலையில் இஸ்ரேல் தமது தாக்குதலை தணித்திருந்தது.
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை குண்டு மழை பொழிந்தது. இதில் மருத்துவமனைகள், அதனை ஒட்டிய அகதிகள் முகாம் ஆகியவையும் இலக்காகின. காஸா மருத்துவமனை மீது குண்டு மழை பொழிந்ததில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாக சில சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஹமாஸ் நிர்வாகத்தின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் இத்தகவல்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த மருத்துவமனையில்தான் பல்லாயிரக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே இந்த துயர படுகொலைக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன அரசு 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.