பாஜக எம்பி பிரிஜ் பூஷனுக்கு எதிராக இனி சாலைகளில் போராட்டம் இல்லாமல், நீதிமன்றத்தில் மட்டுமே சட்டப்போராட்டம் நடத்தப்படும் என மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் அறிவித்துள்ளார்.
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் பல்வேறு கட்ட போராட்டத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர்கள் பேரணியாக புதிய நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து, வன்கொடுமைகளைச் செய்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண்சிங்கை கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி சர்வதேச போட்டிகளில் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நீரில் வீச போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.
இந்த நிலையில் பாஜக எம்பிக்கு எதிராக படிப்படியான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வீரர், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அரசு ஏற்றதை அடுத்து, கடந்த 15ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இனி சாலையில் போரிட மாட்டோம் என்றும், சட்டப்போராட்டம்தான் நடத்துவோம் என்றும் சாக்சி மாலிக் குறிப்பிட்டுள்ளார்.