டெல்லி: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான மோதல் தீவிரமாகி வரும் நிலையில், பஞ்சாபில் வைத்து உள்ளூர் அரசியல் தலைவர் ஒருவரின் கொலைக்குக் கனடாவில் இருக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியாவுக்கும் கனடா நாட்டிற்கும் நீண்ட காலமாக இருந்த வந்த உறவில் இன்று மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கனடா நாட்டை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடாவில் வைத்து கொலை செய்யப்பட்டார். அவர் அங்கே காலிஸ்தான் பிரிவாணைவாத இயக்கத்தின் முக்கிய தலைவராக அறியப்படுகிறார். இவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தான் இப்போது இரு நாடுகளுக்கும் இடையே பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது
கனடா: இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அவர் தெரிவித்தார். அண்மையில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடமும் இது குறித்துக் கேட்டதாகவும் ட்ரூடோ தெரிவித்தார்.
கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகன் கொலை செய்யப்பட்டதில் வெளிநாட்டு அரசின் தலையீடு இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் இது கனடா இறையாண்மையை மீறும் செயலாகும் என்றும் அவர் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து கனடா நாட்டிற்கான முக்கிய இந்தியா தூதர் ஒருவரை நாட்டில் இருந்து வெளியேற்றியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவிற்கான கனடா தூதர் ஒருவரை இந்தியாவும் வெளியேற்றியது.
கொடூரமாகப் படுகொலை: இதற்கிடையே பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்குக் கனடா நாட்டை சேர்ந்த காலிஸ்தான் இயக்கம் ஒன்று பொறுப்பேற்றுள்ளது. பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் உள்ளூர் தலைவர் பல்ஜிந்தர் சிங் பாலி என்பவர் அவரது இல்லத்தில் வைத்தே கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டின் முன்புறம் வந்த போது சில அடையாளம் தெரியாத ஆசாமிகள் பல்ஜிந்தர் சிங் பாலியை சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்த கொலை அங்கே வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
கனடா பயங்கரவாதி: கொலை செய்யப்பட்ட பல்ஜிந்தர் சிங் பாலி அஜீத்வால் பகுதியின் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். இதற்கிடையே இந்தக் கொலைக்குத் தான் கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ் டல்லா என்பவர் பொறுப்பேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் விரிவான போஸ்ட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். பல்ஜிந்தர் சிங் பாலி தனது எதிர்காலத்தைப் பாழாக்கிவிட்டதாகவும், அவரால் தான் ரவுடிகள் கலாச்சாரத்திற்குள் தள்ளப்பட்டதாகவும் காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ் டல்லா குற்றஞ்சாட்டினார். மேலும், தனது தாய் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஒரே காரணம் இந்த பாலி தான் என்றும் அவர் சாடியுள்ளார்.
யார் இவர்: கனடா நாட்டில் இருக்கும் இந்த காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ் டல்லா தேசிய புலனாய்வு அமைப்பால் தேடப்பட்டு வரும் நபர் ஆவார். இவர் கடந்த 3, 4 ஆண்டுகளாகவே கனடாவில் இருந்து இயங்கி வருகிறார். அங்கிருந்தபடியே பஞ்சாபில் கொலை உட்பட பல மோசமான நடவடிக்கைகளிலும் அவர் இறங்கியுள்ளார்.
என்ன நடந்தது: பல்ஜிந்தர் சிங் பாலி தனது வீட்டில் முடிவெட்டிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு போன் கால் ஒன்று வந்துள்ளது. எதிர்புறம் பேசிய அந்த நபர், வெளியே வந்து சில ஆவணங்களில் கையெழுத்திடுமாறு கேட்டுள்ளார். வழக்கமாக இதுபோன்ற போன்கால் வரும் என்பதால் அவருக்கு எந்தவொரு சந்தேகமும் ஏற்படவில்லை. அவர் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, பைக்கில் வந்த இரண்டு பேர் பாலியை சுட்டுள்ளனர்.
சரமாரியாகச் சுட்ட அவர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பியோடினர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த பாலி அங்கேயே சரிந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில் தான் அவரது கொலைக்குக் கனடா நாட்டிலுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி பொறுப்பேற்றுள்ளார்.