சென்னை: ஆவடி, தாம்பரம் உள்பட சென்னையின் மூன்று மாநகராட்சி பகுதிகளில் வீடு கடடுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்தால் ஒரு மாதத்தில் அனுமதி கிடைப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் சென்னையை ஒட்டியுள்ள நகராட்சி பகுதிகளிலும் ஒரு மாதத்தில் அனுமதி கிடைக்கிறதாம். ஆனால் சென்னை புறநகரில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் வரைபட அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி பொதுமக்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் தரைத் தளம், முதல் தளம் வீடு கட்டுவதற்கு கட்டிட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் விண்ணப்பம் செய்து கட்டிட வரைபட அனுமதி பெற்று கொள்ளலாம் என்றார்.
இதுபற்றி அரசு வெளியிட்ட அறிவிப்பில், கட்டிட அனுமதிக்காக அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து, அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டிட விதிகளை எளிமைப்படுத்தும் வகையிலும் ஒரு புதுமையான முயற்சியாக சுயசான்றிதழ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் மூலம், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், நடுத்தர மக்கள் சுயசான்றிதழ் அடிப்படையில் ஒற்றை சாளர முறையில் கட்டிட அனுமதிகளை உடனடியாக பெற முடியும்.
அதிகபட்சம் 2,500 சதுரஅடி பரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுரஅடி கட்டிட பரப்பளவுக்குள் தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்துக்கு உட்பட்டு கட்டப்படும் குடியிருப்பு கட்டிடத்துக்கு இத்திட்டத்தின்கீழ் எளிதாகவும், உடனடியாகவும் கட்டிட அனுமதி பெற முடியும். இதற்காக மென்பொருள் தொகுப்பு உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
தவிர, இந்த புதிய திட்டத்தின்கீழ் அனுமதி பெறும் கட்டிடங்களுக் கும், சாலைக்கும் இடையே உள்ள பகுதி 1.50 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. சதுர மீட்டருக்கு ரூ.2 என்ற கூராய்வு கட்டணம், உள்கட்ட மைப்பு மற்றும் வசதிகளுக்காக சதுரமீட்டருக்கு விதிக்கப்படும் ரூ.375 கட்டணம் ஆகியவற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் உரிய கட்டணங்களை செலுத்திய பிறகு, 'க்யூ ஆர் கோடு' குறியீட்டுடன் கட்டிட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், முன்கள ஆய்வு மேற்கொள்வதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு, உடனடியாக கட்டுமான பணி மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கட்டிட முடிவு சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு கூறியிருந்தது.
இதன்படியே கட்டிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் மாநகராட்சி, நகராட்சி பகுதி மக்கள் பயன் அடைந்து வரும் நிலையில் ஊராட்சி பகுதி மக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். வீடு கட்டுவதற்கான அனுமதி கிடைக்காமல், பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் தேங்கிக் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை மாநகரத்தை பொறுத்தவரை வடக்கே பொன்னேரி தொடங்கி, தெற்கே செங்கல்பட்டு வரையிலும், கிழக்கே மகாபலிபுரம் வரையிலும். தென்மேற்கே ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், வடமேற்கே திருவள்ளூர் வரையிலும் வளர்ந்துவிட்டது. சென்னை மாநகரம் என்பது சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய மூன்று மாநகராட்சிகளையும், பொன்னேரி, திருநின்றவூர், திருவேற்காடு, பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு, திருவள்ளூர உள்ளிட்ட நகராட்சிகளாகவும் இருக்கிறது. இந்த பகுதிகளில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்தால், ஒரு மாதத்துக்குள் அனுமதி கிடைத்து விடுகிறது.
ஆனால் சென்னை புறநகரில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வீடு கட்டுவதற்கு, வரைபட அனுமதிக்கு சென்னை மாநகராட்சி தளத்தில் விண்ணப்பிக் முடியாத நிலை இருக்கிறது. சென்னை புறநகர் பகுதி கமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்திருந்தது. . இதனால் நேரிடையாக கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்ந்து பல மாதங்களாக நிலுவையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் வாழும் பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்யவும் முடியாத நிலை இருக்கிறது. ஏனெனில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சாப்ட்வேர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்னும் இணைக்கப்படவில்லை. இதன் காரணமாக வீடு கட்ட அனுமதி கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலை இருக்கிறது என்கிறார்கள்.
குறிப்பாக சொல்வது என்றால். பூந்தமல்லி, குன்றத்தூர், புனித தோமையார் மலை, காட்டாங்கொளத்தூர், வில்லிவாக்கம், புழல், சோழவரம், மீஞ்சூர் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் கிராமப்புற மக்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தும் கட்டிட வரைபட அனுமதி கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இதனால் கையூட்டு கொடுத்து காரியம் சாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும், எனவே சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் உடனடியாக, கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.