கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சீதப்பால் மேல குளத்தாங்கரையை சேர்ந்த சவ்ரிபாய் என்ற மூதாட்டி பேத்தியை பார்க்க சென்றபோது வழிதவறியதால் குளச்சல் பேருந்து நிலையில விடிய விடிய தவித்துள்ளார். இதை கண்ட குளச்சசல் பகுதி மக்கள் மூதாட்டிக்கு உணவளித்து ஊருக்கு அனுப்பியிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதி மக்களின் இந்த பாசம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சீதப்பால் மேல குளத்தாங்கரையை சேர்ந்த பிரான்சிஸ் என்பவருடைய மனைவி சவ்ரிபாய் (வயது85). இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இதில் பிரான்சிஸ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே உடல் நலக்குறைவால் காலமாகிவிட்டார். மூதாட்டி சவ்ரிபாய் இளைய மகன் சபரிமுத்துவுடன் வசித்து வந்தார். சபரிமுத்துவின் மகளுக்கு திருமணம் ஆகி கருங்கலில் வசித்து வருகிறார்.
மூதாட்டி சவ்ரிபாய் கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது பேத்தியை பார்ப்பதற்காக அரசு பேருந்தில் ஏறி சீதப்பாலில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கருங்கல் செல்வதற்கு அரசு பேருந்தில் ஏறியதாக சொல்லப்படுகிறது. ஆனால், பாட்டி கருங்கல் வரவில்லை என சபரிமுத்துவுக்கு அவரது மகள் தகவல் கொடுத்தார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், சவ்ரிபாய் எங்கோ சென்று விட்டதாக நினைத்து இதுபற்றி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே நாகர்கோவில் வடசேரியில் இருந்து தவறுதலாக பஸ் மாறி ஏறியிருக்கிறார் சவ்ரிபாய். இதனால் மூதாட்டி கருங்கல்லுக்கு பதில் குளச்சில் இறங்கி உள்ளார். குளச்சல் பேருந்து நிலையத்தில் சவ்ரிபாய் செய்வதறியாது பரிதவித்து நின்றார். அப்போது அங்கு நின்ற சிலர் அவரை பார்த்து விசாரித்து விபரத்தை கேட்டனர். இரவு நேரமானதால் பஸ் ஏற்றிவிட முடியாமல் விடிய விடிய சவ்ரிபாய் தவித்ததார்.
இதையடுத்து மூதாட்டிக்கு இரவு உணவு வாங்கி கொடுத்த அந்த பகுதி மக்கள், அவரை அங்கேயே தங்க வைத்து ஆறுதல் தெரிவித்தனர் பின்னர் நேற்று காலையில் குளச்சலில் இருந்து நாகர்கோவிலுக்கு பாதுகாப்பாக பஸ் ஏற்றி அவரை அனுப்பி வைத்தனர். இதுபற்றிய விவரத்தை சீதப்பாலில் உள்ள சவ்ரிபாயின் குடும்பத்தினருக்கும் தெரிவித்தனர்.
அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த குடும்பத்தினர், உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வடசேரி பேருந்து நிலையத்துக்கு வந்து காத்திருந்தனர். அங்கு பஸ்சில் வந்து இறங்கிய சவ்ரிபாய்யை கட்டியணைந்து மகிழ்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை ஊருக்கு அழைத்து வந்தார்கள். பஸ் மாறி ஏறியதால் வழிதவறி வந்த மூதாட்டிக்கு, உணவளித்து பாதுகாப்பாக தங்கவைத்து ஊருக்கு அனுப்பி வைத்த கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதி மக்களின் பாசம் நெகிழ வைத்துள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.