என் தந்தைக்கு இரங்கல் கூட்டம் கூட நடத்தல.. மன்மோகன் சிங்கிற்கு நினைவிடமா? பிரணாப் முகர்ஜி மகள் கோபம்

post-img
டெல்லி: மன்மோகன் சிங் உடல் இன்று தகனம் செய்யப்படும் நிலையில் அவருக்கு தனியாக நினைவிடம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் காங்கிரஸ் தலைமை கோரிக்கை விடுத்துள்ளது. காங்கிரஸ் தலைமையின் இந்த கோரிக்கை தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, தனது தந்தைக்கு இரங்கல் கூட்டம் நடத்துவதை பற்றி காங்கிரஸ் காரிய கமிட்டி கவலைப்படவில்லை என்று கூறியுள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாக இருந்தவருமான மன்மோகன் சிங் நேற்று முன் தினம் உயிரிழந்தார். 92 வயதான மன்மோகன் சிங் வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி ஒய்வு எடுத்து வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு அவருக்கு திடீர் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி இரவு 9.51 மணியளவில் மன்மோகன் சிங் காலமானார். நேற்று அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு இன்று அனைத்து அரசு மரியாதைகளுடன் நடக்கிறது. இதற்கிடையே மன்மோகன் சிங்கிற்கு தனியாக நினைவிடம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது தொடர்பாக மோடியிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார். இதனிடையே, நினைவிடம் கட்ட கோரிக்கை விடுத்த காங்கிரஸ் கட்சியின் தலைமையை பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக ஷர்மிஸ்தா முகர்ஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- "எனது தந்தையும் முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். அவர் மரணம் அடைந்த போது, காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் இரங்கல் கூட்டம் கூட நடத்துவது பற்றி கூட யாரும் கவலைப்படவில்லை. மூத்த தலைவர் ஒருவர் என்னிடம் கூறுகையில், முன்னாள் குடியரசுத் தலைவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடத்துவது இல்லை என்றார். இது முற்றிலும் அபத்தமானது. முன்னாள் குடியரசுத் தலைவர் கே ஆ நாரயணனுக்கு காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி இரங்கல் கூட்டம் நடத்தியதை எனது தந்தையின் டைரியில் இருந்து நான் அறிந்து கொண்டேன். எனவே அந்த நேரத்தில் காங்கிரஸ் தலைமை என்னிடம் தவறான தகவலை கூறியது" என்று கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்த சி.ஆர்.கேசவன் என்பவர் தனது எக்ஸ் தளத்தில், "காந்தி குடும்பத்தை சேராத பிற காங்கிரஸ் தலைவர்களுக்கு அக்கட்சி உரிய மரியாதை கொடுக்கவில்லை" என்ற ரீதியில் பதிவிட்டு இருந்தார். இவரது பதிவை பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையே, மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் கட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திலேயே நினைவிடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யுமாறு கார்கே, பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட அறிக்கையில், மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் கட்ட இடம் ஒதுக்கப்படும். இடைப்பட்ட காலத்தில் இறுதிச்சடங்க்குகள், உடல் தகனம் போன்ற இதர பணிகள் நடைபெறும்" என்றார். இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், " மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசால் ஒரு இடத்தை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமருக்கு இழைக்கப்படும் அநீதி இது"என சாடினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post