அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது பேசிய நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டிருக்கும் விதம் மிக மோசமாக இருக்கிறது. புகார் அளிக்க வந்த பெண்ணிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறும்போது, ஒரு காவல்துறை அதிகாரிகூட உதவி செய்ய முடியாதா என கேள்வி எழுப்பினர்.
அதேபோல பாதிப்பட்ட மாணவி மீது குறை கூறும் வகையில்தான் முதல் தகவல் அறிக்கை உள்ளது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்க 3 ஐ பிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்திடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த குழுவில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் இடம் பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதற்கிடையே தொழில்நுட்ப கோளாறால் இணையத்தில் வெளியான பாலியல் வன்கொடுமை எப்.ஐ.ஆரை 14 பேர் பதவிறக்கம் செய்ததாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. அந்த 14 பேரும் விசாரணை வளையத்தில் வந்துள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.