மாஸ்கோ: உக்ரைனுடன் ரஷ்யா தீவிரமாக போரிட்டு வருகிறது. இப்போரில் ரஷ்யாவுக்கு உதவியாக வடகொரியா, தனது ராணுவ வீரர்களை அனுப்பியிருந்தது. இந்த வீரர்களில் சிலரை உக்ரைன் சிறைபிடித்திருக்கிறது.
தென்கொரியாவின் உளவு நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்திருக்கிறது. ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையே வெறும் 11 கோடிதான். ஆனால் அந்நாடுதான் உலகின் மிகப்பெரிய நாடு. எனவே, எல்லையை பாதுகாக்க கூடுதலான ஆட்கள் ராணுவத்திற்கு தேவைப்படுகின்றனர். இதற்காக வடகொரியாவை ரஷ்யா நாடியிருந்தது. ஏற்கெனவே, வடகொரியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நல்ல உறவுமுறை இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், சுமார் 11,000 வீரர்களை அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு அனுப்பியிருந்தார்.
அவர்கள் அனைவரும் உக்ரைன் படைகளை எதிர்த்து தீவிரமாக சண்டை செய்து வருகின்றனர். உக்ரைன் சிறிய நாடாக இருந்தாலும், போரை எளிதாக விட்டுக்கொடுக்க அவர்கள் தயராக இல்லை. மட்டுமல்லாது, அமெரிக்கா ஏராளமான அளவில் ராணுவ உதவிகளை செய்து வருகிறது. இது போரை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. போர் இரு நாடுகள் தரப்பிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஈடுபட்டிருந்த வடகொரிய வீரர் ஒருவரை உக்ரைன் ராணுவம் கைது செய்திருக்கிறது.
இந்த தகவலை தென்கொரிய உளவு அமைப்புகள் தெரிவித்திருப்பதாக First post செய்தி ஊடகம் கூறியுள்ளது. ஏற்கெனவே இந்த போரில் சுமார் 3000க்கும் அதிகமான வடகொரிய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இப்போது உயிருடன் ஒரு வீரர் கைது செய்யப்பட்டிருப்பது ரஷ்யாவுக்கு பின்னடைவையும், வடகொரியாவுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
போருக்கான காரணம் என்ன?: நேட்டோ அமைப்புதான் இப்போது நடக்கும் போருக்கு முக்கிய காரணம். அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, உலகம் முழுவதும் தனக்கு ஆதரவான நாடுகளில், ராணுவத்தை நிலை நிறுத்தி வருகிறது. உக்ரைனிலும் நேட்டோவை நிலை நிறுத்த கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கதை வேலைக்கு ஆகவில்லை. எனவே இதற்கு முன்னர் இருந்த அரசை அகற்றிவிட்டு, ஜெலன்ஸ்கி தலைமையிலான புதிய அரசை அமெரிக்கா ஆட்சியில் உட்கார வைத்தது.
நேட்டோ: ஜெலன்ஸ்கி வந்தவுடன், நேட்டோவில் உக்ரைன் இணைய ஒப்புக்கொண்டார். இதன்படி நேட்டோ படைகள் உக்ரைனில் நிலை நிறுத்தப்பட்டால் அது ரஷ்யாவுக்கு பெரிய அவமானமாக போய்விடும். மட்டுமல்லாது ரஷ்ய எல்லையில் நேட்டோ படைகள் இருப்பதை அந்நாட்டு மக்கள் விரும்ப மாட்டார்கள். எனவே, இதற்கு எதிராக சண்டை செய்ய வேண்டிய நிலைக்கு அதிபர் புதின் தள்ளப்பட்டார். உக்ரைனுக்கு தொடர்ந்து எச்சரிக்கை அனுப்பிய அவர், கடந்த 2022ம் ஆண்டு ஜனவரியில் போரை தொடங்குவதாக அறிவித்தார்.
ஆபத்தில் உலகம்: போர் இப்போதுவரை நீடித்து வருகிறது. இது மேலும் நீடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால், உக்ரைன்+அமெரிக்கா பக்கம் சில நாடுகளும், ரஷ்யா+சீனா பக்கம் சில நாடுகளும் ஒன்று சேர்ந்து, போரை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்திற்கு கொண்டு செல்லும். இது மூன்றாவது உலகப்போராகவும் வெடிக்கும். இதனால் இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற வளரும் மற்றும் ஏழ்மை நாடுகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும். எனவே பலரும் போருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.