2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் லெபனானை சேர்ந்த ஹெஸ்பொலா ஆயுதக்குழுவினர் பயன்படுத்திய பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடிப்புக்கு உள்ளானது. இஸ்ரேலால் தயாரிக்கப்பட்டு, வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட இந்த வாக்கி டாக்கிகளை ஹெஸ்பொலா குழுவினர் 10 ஆண்டுகளாக எப்படி பயன்படுத்தினர் என்பதை இஸ்ரேலின் முன்னாள் உளவுத்துறை ஏஜெண்ட்கள் இருவர் வெளிப்படுத்தியுள்ளனர்
இந்த வாக்கி-டாக்கிகள் மற்றும் பேஜர்கள் இஸ்ரேலால் தயாரிக்கப்பட்டவை என்று வெளிக்காட்டாமல் ஏமாற்றி எவ்வாறு இவற்றை ஆயிரக்கணக்கில் ஹெஸ்பொலா குழுவிடம் விற்கப்பட்டது என்று மொசாட்டின் முன்னாள் ஏஜெண்ட்கள் இருவர் சிபிஎஸ் செய்திகளிடம் கூறினர்.
இந்த வெடிப்பு தாக்குதல்களில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானவர் காயமடைந்தனர்.
இது ஹெஸ்பொல்லா குழுவினரை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால் இந்த தாக்குதலில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் இந்த தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என விவரித்தார்.
இந்த தாக்குதல் நடந்தபோது, இஸ்ரேலும் ஹெஸ்பொல்லாவும் மோதலில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2023- ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மோசமான தாக்குதலை நடத்தியது. அதற்கு ஒரு நாளுக்கு பிறகு, ஹெஸ்பொலாவும் இஸ்ரேலின் இலக்குகளை தாக்கியது.
2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி அன்று, லெபனான் முழுவதும், குறிப்பாக ஹெஸ்பொல்லா குழுவினர் இருக்கும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன.
இதனை பயன்படுத்தி வந்தவர்களுடன் சேர்த்து அவர்களுக்கு அருகில் இருந்த சிலரும் இந்த வெடிப்பு சம்பவத்தினால் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமும் குழப்பமும் நிலவியது.
இது நடந்த அடுத்த நாளே, இதே முறையில் வாக்கி-டாக்கிகளும் வெடித்தன. அதிலும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.
இந்த சம்பவங்கள் நடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என்று ஒப்புக்கொண்டார் என்று இஸ்ரேல் ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டன.
பிபிசியின் அமெரிக்க ஊடக கூட்டாளியான சிபிஎஸ் செய்திகள் உடனான ஒரு நேர்காணலில், இரு முன்னாள் மொசாட் ஏஜெண்ட்கள் இந்த தாக்குதல் பற்றிய விவரங்களை கூறினர்.
இந்த வாக்கி டாக்கிகளை இயக்கும் பேட்டரிகளுக்குள் ஒரு வெடிக்கும் சாதனத்தை இஸ்ரேலின் மொசாட் நிறுவனம் மறைத்து வைத்திருந்தது என தனது பெயர் மைக்கேல் என கூறிய ஏஜெண்ட் தெரிவித்தார்.
பொதுவாக இந்த கருவிகளை வைத்திருப்பவர்கள் அவர்களது உடுப்பில் இதயத்திற்கு மிக அருகே அதனை வைத்திருப்பார்கள் என்றும் அவர் கூறினர்.
ஹெஸ்பொலா ஆயுதக்குழு 10 வருடங்களுக்கு முன்னர் ஒரு போலி நிறுவனத்திடமிருந்து 16,000 வாக்கி-டாக்கிகளை "நல்ல விலையில்" வாங்கியதாகவும் மைக்கேல் கூறினார்.
"இஸ்ரேலுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறிய முடியாத வகையில் வெளிநாட்டு போலி நிறுவனங்களை உருவாக்க எங்களிடம் பல வாய்ப்புகள் இருந்தன. விநியோகச் சங்கிலியை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பல போலி நிறுவனங்களை உருவாக்கினோம்'' என்று அவர் குறிப்பிட்டார்.
"நாங்கள் ஒரு போலியான உலகத்தை உருவாக்கினோம். அதற்கு கதை எழுதியது, இயக்கியது, தயாரித்தது, நடித்தது என எல்லாம் நாங்கள்தான். உலகமே எங்கள் மேடை''
முன்பு வாக்கி டாக்கிகளை மட்டுமே கொண்டிருந்த ஆப்ரேஷன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஜர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது என்று சிபிஎஸ் செய்திகள் தெரிவித்தது.
அந்த சமயம், 'கோல்ட் அப்போலோ' என்ற தாய்வான் நிறுவனத்திடமிருந்து ஹெஸ்பொலா பேஜர்களை வாங்கி வந்ததைக் கண்டறிந்ததாக மொசாட் கூறியது.
எனவே கோல்ட் அப்போலோ என்ற பெயரில் மொசாட் ஒரு ஒரு போலி நிறுவனத்தை நிறுவி, வெடிபொருள் மறைத்து வைக்கப்பட்ட பேஜர்களை உருவாக்கியது. இதனை அந்த உண்மையான தாய்வான் நிறுவானத்திற்கே தெரியாமல் செய்தது.
இந்த பேஜர்களை பயன்படுத்துபவரை மட்டும் காயப்படுத்தும் அளவுக்கு வெடிமருந்துகளை மொசாட் உள்ளே வைத்ததாக சிபிஎஸ் செய்திகள் தெரிவித்தது.
"குறைந்தபட்ச சேதம் மட்டுமே ஏற்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக எல்லா செயல்பாடுகளையும் பல முறை சோதனை செய்வதுண்டு", என்று கேப்ரியல் என்று அழைக்கப்படும் மற்றொரு இஸ்ரேலிய ஏஜெண்ட் கூறினார்.
பேஜரில் வரும் செய்திகளை உடனே எடுத்து பார்க்கும் அளவிற்கு மிகவும் அவசரமாக ஒலிக்கும் ஒரு குறிப்பிட்ட ரிங்டோனை மொசாட் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறினார்.
விளம்பரப் படங்கள் மற்றும் பிரசுரங்களை உருவாக்கி அதனை இணையத்தில் வெளியிட்டு அதன் மூலம் ஹெஸ்பொலா குழுவினரை ஏமாற்றி, மொசாட் இந்த பேஜர்களை வாங்க வைத்ததாக கேப்ரியல் கூறினார்.
"இந்த பேஜர்களை ஹெஸ்பொலா எங்களிடம் இருந்து வாங்கும்போது, இது மொசாட் விற்பனை செய்தது என்று அவர்கள் கொஞ்சம் கூட தெரியவரவில்லை.''
2024- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள், ஹெஸ்பொலா 5,000 பேஜர்களை வாங்கியதாக சிபிஎஸ் நிறுவனம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் ஹெஸ்பொலா சந்தேகம் கொள்ளத் தொடங்கியதாக மொசாட் அஞ்சியபோது, இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை தொடுத்தது.
இந்த வெடிப்பு சம்பவத்தினால் லெபனான் முழுவதும் அதிர்ச்சி அலைகள் எழுந்தன. பல்பொருள் அங்காடிகள் உட்பட பேஜர்கள் கொண்டு செல்லப்பட்ட எல்லா இடங்களிலும் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தன.
இந்த சம்பவத்தில் நடந்த உயிரிழப்புகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. அவர்களில் பலர் கை மற்றும் கால்களை இழந்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு, ஹெஸ்பொலா இன்னும் இந்த வெடிப்பு தாக்குதலில் இருந்தே மீண்டு வராத நிலையில் இருந்தபோது, இஸ்ரேல் ஹெஸ்பொல்லா இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை தொடங்கியது. மேலும் இஸ்ரேல் லெபனானில் தரைவழி படையெடுப்பையும் தொடர்ந்தது.
இரு தரப்பினரும் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி அன்று போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி தாக்குதல்களை லெபனான் கடுமையாக கண்டித்தது. மேலும் , இஸ்ரேல் லெபனானை "திகைக்க வைத்துள்ளது", என்று கூறினார்.
''இந்த தாக்குதல்கள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தையும் மீறுவதாக இருக்கிறது'' என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் துர்க் கூறினார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.