‘கெத்து’ ஐபிஎஸ் ஜோடி! ஒரே நாளில் புரொமோஷன்.. அருகருகே பணியிடம்! வருண் குமார்- வந்திதா! யார் இவர்கள்?

post-img
சென்னை: நேர்மைக்கும், துணிச்சலுக்கும் பெயர்போன ஐபிஎஸ் ஜோடிகளான வருண்குமார், வந்திதா பாண்டே இருவரும் ஒரே நாளில் டி.ஐ.ஜி-களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அருகருகே உள்ள திருச்சி - புதுக்கோட்டை மாவட்டங்களில் எஸ்.பிக்களாக பணியாற்றி வந்த இருவரும் இனி முறையே திருச்சி - திண்டுக்கல் சரக டிஐஜிகளாக பணியாற்ற உள்ளனர். இவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சியினரால் கடுமையான சமூக வலைதள தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. 2011 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரிகளான வருண் குமார் - நந்திதா பாண்டே இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். காவல்துறையில் இருவருமே அதிரடி நடவடிக்கைகளுக்கும், நேர்மைக்கும், துணிச்சலுக்கும் பெயர் போனவர்கள். இவர்கள் இருவருக்கும் ஒரே நாளில் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கியுள்ளது தமிழக அரசு. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இவர்கள் இருவருக்கும் அருகருகே உள்ள மாவட்டங்களில் பதவி உயர்வு கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வருண்குமார், பல் மருத்துவப் படிப்பு முடித்தவர். 2010 ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி, அதில் அகில இந்திய அளவில் 3 ஆம் இடத்தைப் பிடித்தவர். அவர் கேட்டால் சிவில் சர்வீஸின் எந்தப் பிரிவும் கிடைக்கும் என்ற நிலையில், காவல்துறை மீது கொண்ட பற்று காரணமாக ஐ.பி.எஸ் பிரிவை தேர்ந்தெடுத்தார். 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வாகி பயிற்சி முடித்து உதவி காவல் கண்காணிப்பாளராக அருப்புக்கோட்டை, திருப்பத்தூர் மற்றும் அதிதீவிரப்படை சென்னையிலும் பணிபுரிந்தார். பின்னர் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று குடிமைபொருள் நுண்ணறிவு பிரிவு, ராமநாதபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், சென்னையில் அலுவலக தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவவில் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து, மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக திருச்சி மாவட்ட எஸ்.பியாக பணிபுரிந்து வந்தார். திருச்சி எஸ்.பியாக அவர் பொறுப்பேற்ற பிறகு, கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் பெருமளவில் குறைந்துள்ளதாக மக்கள் மத்தியிலேயே பேச்சு உள்ளது. இந்த நிலையில் தான் அவர், திருச்சி சரக டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவர் வந்திதா பாண்டே. வருண்குமார் பேட்ச் அதிகாரி. அதாவது, 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி. 2013 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏ.எஸ்.பியாக பணியில் சேர்ந்த வந்திதா பாண்டே ஐ.பி.எஸ் 2014-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்ட ஏ.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் ஏ.எஸ்.பியாக வந்திதா பாண்டே பணியாற்றிய சமயத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்தச் சிறுமியிடம், உண்மையில் நடந்ததை நடந்தபடியே வாக்குமூலமாக வாங்கினார். தன்னைச் சீரழித்த போலீஸ் அதிகாரிகளின் பெயர்களை அந்தச் சிறுமி பட்டியல் போட அதை சட்டப்படி பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவர் வந்திதா பாண்டே. அதன்பிறகு வந்திதா பாண்டே கரூர் எஸ்.பியாக மாற்றப்பட்ட நிலையில், 2016 சட்டசபை தேர்தலின்போது, அரவக்குறிச்சி அருகே கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடியை மடக்கிப்பிடித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் புள்ளிகளை அலற வைத்தார். அதன்பிறகு அதிமுக ஆட்சி காலத்தில் டம்மி பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு வந்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில் தான், தற்போது, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் வந்திதா பாண்டே. அவரது நேர்மைக்கும், துணிச்சலுக்கும் கிடைத்த வெகுமதியாகவே இந்த பதவி உயர்வு பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக வருண் குமார் பணிபுரிந்தபோது, அவதூறு கருத்துகளை பரப்பியதற்காக யூடியூபர் சாட்டை துரைமுருகனை கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தார். அதன்பிறகு மீண்டும் அதே யூடியூபர் அவதூறு கருத்துக்காக கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, எஸ்.பி வருண்குமாரை நேரடியாகவே தாக்கிப் பேசினார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதையடுத்து, சீமானுக்கு அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பினார் வருண் குமார். இதன் காரணமாக நாதக - வருண் குமார் இடையே மோதல் வலுவடைந்தது. வருண் குமார், அவரது மனைவியும் புதுக்கோட்டை எஸ்.பியுமான வந்திதா பாண்டே, குழந்தைகள் என சரமாரியாக வசைபாடியும், ஆபாசமாக கருத்துகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். ஃபேக் ஐடிகள் வாயிலாக கொலை மிரட்டலும் விடுத்தனர். இதையடுத்து, வருண் குமாரும், வந்திதா பாண்டேவும், எக்ஸ் சமூக வலைதளத்தில் இருந்தே தற்காலிகமாக விலகினர். தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு சண்டிகரில் அண்மையில் நடைபெற்றபோது, அந்த மாநாட்டில் பேசிய வருண் குமார், "சைபர் குற்றங்களால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள நானும், என் குடும்பத்தினருமே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளோம். அதற்கு காரணம் நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சியினருக்கு உலகம் முழுவதும் ஆட்கள் உண்டு. நாம் தமிழர் கட்சியினர் என்னையும், எனது மனைவி, குழந்தைகளின் மார்ஃபிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு சைபர் தாக்குதல் நடத்தினர். தமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்" எனப் பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து, மீண்டும் சீமான் "ரொம்ப நாளாக அவர் (வருண்குமார்) எங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறார். இந்த காக்கி உடையில் எத்தனை ஆண்டுகள் இருப்பார்? 30, 40 ஆண்டுகள் கழித்து இறங்கித்தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயே தான் இருப்போம். பார்த்துப் பேச வேண்டும். மோதுவோம் என்றாகிவிட்டது, வா.. மோதுவோம்" என சவால் விட்டது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post