அண்ணா பல்கலை.. ஜல்லிக்கட்டு பாணி போராட்டத்திற்கு விஜய் முயற்சி? அலர்ட்டான போலீஸ்.. பதிலடி ஆரம்பம்

post-img
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் மாணவிகளுக்கு எழுதிய கடிதம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அக்கடிதத்தில், "அன்புத் தங்கைகளே, கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என் அருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் மன வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்தது. அதற்காகவே இக்கடிதம். எல்லாச் சூழலிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும் அரணாகவும். எனவே எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்," என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தை மாணவிகள் மத்தியில் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி நிர்வாகிகள், வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு விஜய்யின் கடிதத்தை துண்டுப் பிரசுரங்களாக வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதேபோன்ற பிரச்சாரம் சென்னையிலும் நடத்தப்பட்டது. கல்லூரி மாணவிகளிடம் நேரடியாக கடிதம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, ஜல்லிக்கட்டு புரட்சி அல்லது டெல்லி நிர்பயா சம்பவத்தைப் போல, மாணவ-மாணவிகளிடையே ஒரு புதிய எழுச்சியை விஜய் ஏற்படுத்துகிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் ஜல்லிக்கட்டு சமயத்திலும், நிர்பயா பலாத்கார சம்பவம் வெளியான காலகட்டத்திலும், கல்லூரி, மாணவ மாணவிகள்தான் முறையே தமிழகம் மற்றும் டெல்லியில் அணி அணியாக போராட்டம் நடத்தினர். எனவே, விஜயின் கடிதமும் ஒரு புதிய வகை போராட்ட தூண்டலுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது விஜய் அதில் தனது முகத்தை மறைத்துக் கொண்டு கலந்துகொண்டவர் என்பது கூடுதல் தகவலாகும். விஜய்யின் இந்த கடிதம் மற்றும் அதனைத் தொடர்ந்து அவரது தமிழக வெற்றிக் கழகத்தினர், மேற்கொள்ளும் விழிப்புணர்வு பிரச்சாரம், தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தமிழக அரசு இதை சீரியசாக எடுத்துள்ளது. ஆரம்பத்திலேயே இதை தடுத்து நிறுத்த வேண்டும், பெரிய போராட்டம் வெடித்துவிடக் கூடாது என தமிழக காவல்துறை முனைப்பு காட்டிவருகிறது. எனவேதான் சென்னையில், இப்படி கடிதம் வினியோகம் செய்த கட்சி நிர்வாகிகள் மடக்கி மடக்கி கைது செய்யப்பட்டனர். அவர்களை சந்திக்கச் சென்ற தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கைது செய்யப்பட்டுள்ளார். இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post