வழி தவறிவிட்டார் விஜய்..? ஆளுநரை சந்தித்தது தவறு..! சொன்னது அய்யநாதன்

post-img
சென்னை: ஆளுநர் ரவியை சந்தித்து சட்டம் ஒழுங்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி விஜய் மனு அளித்திருந்த நிலையில், அது கொள்கை ரீதியாக தவறானது என்று தவெக ஆதரவாளர் அய்யநாதன் தெரிவித்திருக்கிறார். அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டி வலியுறுத்துவதற்காக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து 3 பக்க அளவில் கோரிக்கை மனுவை அளித்தார். அந்தச் சந்திப்புக்குப் பின் அவர் செய்தியாளர்களைச் சந்திப்பார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், அமைதியாகக் கையசைத்துவிட்டு அவர் சென்றுவிட்டார். விஜய் ஆளுநரை சந்தித்துப் புகாரளித்தது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல சர்ச்சை கருத்துகள் பலரும் எழுதிவருகிறார்கள். குறிப்பாக 'ஆளுநர் பதவியே தேவையற்றது' என விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு இப்போது அதே ஆளுநரை சந்திப்பது ஏன்? என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். ஆனால், அண்ணாதுரையின் கொள்கையான 'ஆட்டுக்கு ஏன் தாடி? நாட்டுக்கு ஏன் ஆளுநர்?' என்பதைக் கடைப்பிடித்து வரும் திமுக கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் புகார்களைச் சுட்டிக்காட்டி ஆளுநரிடம் பல புகார் மனுக்களை அளித்துள்ளது. பலமுறை ஆளுநரை அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்தித்து புகார் மனுவை அளித்திருக்கிறார். இதே கேள்வியை திமுக மீது ஏன் வைக்கவில்லை என்றும் ஒரு தரப்பு விவாதித்து வருகிறது. சமூக ஊடக உடன்பிறப்புகளும் தவெக ஐடி விங்க் ஆட்களும் அடித்துக் கொள்வது சகஜம்தான். ஆனால், இதுவரை விஜய் ஆதரவாளராக இருந்து வந்த அய்யநாதன் இந்தச் சந்திப்பை எதிர்த்து கருத்து கூறியுள்ளார். அவரும் ஆளுநரை சந்தித்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்றே சொல்லி இருக்கிறார். தவெகவின் கொள்கையும் அதுவே என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகூட, 'ஆளுநர் என்பவர் மாநில அரசின் ஒரு அங்கம்தானே தவிர, தனி அதிகாரம் கொண்டவரல்ல' என்பதை தெளிவுபடுத்திவிட்டது இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஆளுநர் மற்றும் விஜய் சந்திப்பு தொடர்பாகப் பேசிய அய்யநாதன், "இதுவரை அண்ணாமலை ஏகப்பட்ட மனுக்கள் கொடுத்திருக்கிறார். அதிமுக, திமுககூட ஆளுநரை சந்தித்து பலமுறை மனுக்களைக் கொடுத்திருக்கிறார்கள். இதுவரை அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன? ஆளுநரால் மாநில அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்பதுதான் சட்டம். ஆகவே, விஜய் வழக்கமாக எல்லோரும் செய்வதைப் போலவே நடந்துகொண்டுள்ளார். அவர் தனது தொண்டர்களை திரட்டி மாநிலம் முழுக்க போராட்டம் நடத்தி இருக்கவேண்டும். அதைச் செய்யாதது தவறாவானது. அவர் ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கி இருக்கவேண்டும். அதை அவர் செய்யாது ஏமாற்றம்தான். விஜய் இன்னும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் அளவுக்கு நம்பிக்கை உடையவராக இல்லை என நான் நினைக்கிறேன். எம்.ஜி.ஆர். அவரது காலத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரத்துடன் பேரணியாகச் சென்று ஆளுநரை சந்தித்து புகார் கடிதம் கொடுத்தார். அதையே பலரும் செய்கின்றனர். எம்.ஜி.ஆர் வழி எளிமையான வழி என்பதால் அதை விஜய் போன்றவர்கள் பயன்படுத்துகின்றன. அவர் அரசியல் மற்றும் சினிமா செல்வாக்கு கொண்டவராக இருந்தார். இவர் சினிமா செல்வாக்கு மட்டும்தான். எனவே எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. இந்த மாணவி விவகாரத்தில் விஜய் வீதிக்கு வந்து போராடி இருக்கவேண்டும். மக்கள் சக்தியுடன் இணைந்து அரசை எதிர்த்திருக்க வேண்டும். அதுதான் ஜனநாயக வழி. அதை விஜய் தவறவிட்டுவிட்டார்" என்று தெரிவித்திருக்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post