2024க்கு வேற லெவலில் விடைகொடுக்கும் இஸ்ரோ.. நாளை விண்ணில் பாய்கிறது PSLV C60: கவுண்ட் டவுன் ஆரம்பம்!

post-img
ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் இன்று இரவு அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கி உள்ளது. பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று இரவு 8.58 மணிக்கு தொடங்கி உள்ளது. ஸ்பெடெக்ஸ் (SpaDeX) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. விண்ணில் செலுத்தப்படும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன. ராக்கெட்டின் போயம்-4 எனப்படும் நான்காம் நிலையில் இந்த ஆய்வுக் கருவிகள் இருக்கும். இதில் 14 ஆய்வுக் கருவிகள் இஸ்ரோ தயாரித்தவை. எஞ்சிய 10 கருவிகளும் கல்வி நிறுவனங்களும் பிற தனியார் நிறுவனங்களும் தயாரித்தவை. இந்த பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட், 'SpaDeX - A', 'ஸ்பெடெக்ஸ் - பி' என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கை கோள்களும் நிலைநிறுத்தப்பட உள்ளது. ராக்கெட் விண்ணில் பாய்வதை இஸ்ரோவின் யூடியூப் சேனலில் நேரலையில் காணலாம். வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக 'SpaDeX' எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பி.எஸ்.எல்.வி. சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இது நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பவும், விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் தனித்தனியாக இரு விண்கலங்களை விண்ணில் ஏவி அவற்றை இணையச் செய்வதற்கான சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post