சென்னை சத்யபிரியா கொலை வழக்கு! சதீஷுக்கு தூக்கு தண்டனை! மகளிர் நீதிமன்றம் உத்தரவு

post-img
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சதீஷ் குற்றவாளி என்ற தீர்ப்பானது, கடந்த 27ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் , குற்றவாளி சதீஷுக்கான தண்டனை விவரங்கள் இன்று வெளியான. சதீஷுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சதீஷ் செய்தது குற்றம்தான். ஆனால் அவருக்கு சாகும் வரை சிறை தண்டனை எனப்படும் ஆயுள் தண்டனையை விதித்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என குரல் கொடுத்து வரும் நிலையில் சத்யபிரியா வழக்கில் கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை பலரும் எதிர்க்கிறார்கள். ஒரு கொலைக்கு இன்னொரு கொலை (மரண தண்டனை ) தீர்வாகாது என்கிறார்கள். சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23). இவர் சத்யபிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு சதீஷ் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இப்படித்தான் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்குச் செல்ல சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு சத்யபிரியா வந்தார். அப்போது அங்கு சதீஷும் வந்தார். ரயில் வரும் வரை காத்திருந்த சத்யபிரியாவிடம் போய் தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு சத்யபிரியா, மறுக்க சதீஷுக்கு கோபம் வந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து ரயில் வந்தது. அப்போது சத்யபிரியாவை தள்ளிவிட்டார். இதனால் அந்த பெண் ரயில் மோதி இறந்துவிட்டார். தனது மகள் இறந்த துயரத்தை ஏற்க முடியாத மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பெண்ணின் தாய் வரலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு தொடர்பாக, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தார். சிபிசிஐடி தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். அனைத்து விசாரணையும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கில் கடந்த 27ஆம் தேதி சதீஷ் குற்றவாளி என நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார். இந்த நிலையில் இன்றைய தினம் அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதாக சொல்லப்பட்டது. அதன்படி இன்று மதியம் தண்டனை விவரங்கள் வழங்கப்பட்டன. அதில் கொலையாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீண்ட நாட்கள் கழித்து இப்படியொரு வழக்கில் மரண தண்டனை கிடைத்துள்ளது. பில்கிஸ் பானு வழக்கில் கூட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை, ஆனால் இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post