சீனாவில் திடீரென பரவும் ஹெச்எம்பிவி வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையாம்.. அறிகுறிகள், சிகிச்சை என்ன?

post-img
பெய்ஜிங்: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது. அது எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் அங்கு ஹெச்.எம்.பி.வி வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதென்ன ஹெச்.எம்.பி.வி வைரஸ்.. இதன் அறிகுறிகள் என்ன.. சிகிச்சை முறை என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். கடந்த 2019 டிச. மாதம் திடீரென சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது. சீனாவில் பரவிய கொரோனா உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை எந்தவொரு நாடும் இதில் இருந்து தப்பவில்லை. கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் மொத்தமாக மீண்டு வரவே சில ஆண்டுகள் வரை ஆனது. இதற்கிடையே இப்போது 5 ஆண்டுகள் கழித்து சீனாவில் மீண்டும் புத்தாண்டு சமயத்தில் ஹெச்.எம்.பி.வி வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதென்ன ஹூமன் மெட்டாப்நிமோவைரஸ் வைரஸ்.. இந்த ஹெச்.எம்.பி.வி வைரஸ் அறிகுறிகள் என்ன.. இதன் சிகிச்சை முறைகள் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். ஹ்யூமன் மெட்டாப்நியூமோவைரஸ் என்பது நியூமோவிரிடே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நெகடிவ் சென்ஸ் ஆர்என்ஏ வைரஸாகும். இது ஏவியன் மெட்டாப்நியூமோவைரஸ் துணைக்குழு சி உடன் நெருங்கிய தொடர்புடையது. கடந்த 2001ஆம் ஆண்டு நெதர்லாந்தில் இந்த வைரஸ் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. சில அறியப்படாத வைரஸ்களால் ஏற்படும் சுவாச தொற்று உள்ள குழந்தைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் திடீரென நிமோனியா பாதிப்பு பரவுவதாகச் சொல்லி, அதைக் கண்காணிக்க அந்நாட்டின் நோய்கள் கட்டுப்பாட்டு ஆணையம் பைலட் கண்காணிப்பு திட்டத்தை உருவாக்கி இருந்தது. அங்கு ஹெச்.எம்.பி.வி வைரஸ் காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அங்குக் குளிர்காலம் நிலவும் சூழலில், வரும் காலத்தில் இந்த சுவாச நோய்களின் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறியாக இருப்பதாகச் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. சில கடுமையான சூழல்களில், குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களிடையே மூச்சுக் குழாய் அழற்சி அல்லது நிமோனியா பாதிப்பும் கூட அறிகுறிகளாக இருப்பதாகச் சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆஸ்துமா, சிஓபிடி எனப்படும் நுரையீரல் பாதிப்பு அல்லது எம்பிஸிமா போன்ற நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ் இருமல் அல்லது தும்மலில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள் அல்லது ஏரோசோல்கள் மூலமாகப் பரவுகிறது. மேலும், நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருப்பது, அசுத்தமான சூழல்கள் காரணமாகவும் ஹெச்.எம்.பி.வி வைரஸ் பரவுவதாகச் சீன சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மூன்று முதல் ஐந்து நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்த ஹெஎம்பிவி வைரசுக்கு இதுவரை தடுப்பூசி அல்லது தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லை.. தற்போதைய சூழலில் நோயாளிகளுக்கு அறிகுறிகளைக் கட்டுப்படுத்த மட்டுமே சிகிச்சை தரப்படுகிறது. அதேநேரம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முடிந்தவரை நெரிசலான பகுதிகளைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சுற்றிய உள்ள இடங்களில் நல்ல சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்றும் தங்கும் அறையைச் சரியான காற்றோட்டத்துடன் இருப்பதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்துகிறார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post