தான பத்திரம்.. பிள்ளைகள் கவனிக்காவிட்டால் சொத்து பத்திரத்தை பெற்றோர் ரத்து பண்ணலாம்: சுப்ரீம் கோர்ட்

post-img
டெல்லி: பிள்ளைகளுக்கு தானமாக எழுதி தந்த சொத்துக்களை, பெற்றோர்கள் திரும்ப பெற முடியுமா? தான செட்டில்பமென்ட் செய்த பிறகு, அந்த சொத்துக்களில் , பெற்றோருக்கு மீண்டும் உரிமை உள்ளதா? உச்சநீதிமன்றம் இதுகுறித்து முக்கிய தீர்ப்பு ஒன்றை தந்துள்ளது. சமீபகாலமாகவே, பல்வேறு இடங்களில் சொத்து பிரச்சனை தொடர்பான புகார்கள் அதிகமாகி கொண்டே வருகின்றன. குறிப்பாக, வயது முதிர்ந்த பெற்றோர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான், வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கிவருகிறார்கள். காரணம், எப்போதுமே ஒருவர் தன்னுடைய சொத்துக்களை பிறருக்கு செட்டில்மென்ட் செய்துவிட்டால், எழுதி கொடுக்கும் சொத்தை மறுபடியும் திரும்ப பெற முடியாது. அதனால்தான் இது நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை. குடு்ம்ப சூழல்கள்: குடும்ப சூழல்கள் காரணமாக, சில பெற்றோர்கள், செட்டில் மென்ட் பத்திரம் வாயிலாக, வாரிசுகளுக்கு சொத்தை எழுதி கொடுத்து விடுகிறார்கள். வாரிசுகளும் இந்த சொத்தை பெற்றுக் கொண்டு, ஒருகாலட்டத்துக்கு பிறகு தாய்-தகப்பனை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல், மாவட்ட கலெக்டர்களிடம், அந்த பெற்றோர்கள் கண்ணீருடன் மனு கொடுக்கும் நிலைமைக்கும் ஆளாகிறார்கள். அதனால்தான், செட்டில்மென்ட் பத்திரத்தை, ரத்து செய்ய வழியிருக்கிறதா? என்று ஆதங்கத்துடன் பலரும் கேள்விகள் எழுப்புகிறார்கள். இதற்காகவே, "சட்ட விதிகளுக்கு உட்பட்டு" வருவாய் துறை ஒருசில அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. சொத்து பத்திரம்: எப்போதுமே புதிதாக சொத்து வாங்கும்போது, அதை விற்பவர் செட்டில்மென்ட் பத்திரம் வாயிலாக பெற்றவராக இருந்தால், அதில் ஆட்சேபனை ஏதாவது பதிவாகி உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும். அதேபோல, சொத்தின் மீது வருவாய் துறையில் ஏதாவது நடவடிக்கை நிலுவையில் உள்ளதா? என்பதையும் ஆராய வேண்டும். ஒருவேளை, ஏதாவது நிலுவைத்தொகை பாக்கி இருந்தால், அது சிக்கலை உண்டுபண்ணிவிடும். எனவே, எப்போதுமே, சொத்துக்களை வாங்கும்போது, அதன் செட்டில்மென்ட் பத்திரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார்கள் வருவாய்துறை அதிகாரிகள். தான பத்திரம்: இந்நிலையில், வயதான காலத்தில் பிள்ளைகள் கவனிக்காவிட்டால், பெற்றோர் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என்று நேற்றைய தினம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்புதான், பலரது கவனத்தையும் தற்போது பெற்று வருகிறது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவரை, அவரது மகன் சரியாக கவனிக்கவில்லை... அதனால் மகனுக்கு வழங்கிய சொத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும், அந்த சொத்துகளுக்கான தான பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த வயதான பெண் மத்திய பிரதேசம் ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். தான செட்டில்மென்ட்: இந்த வழக்கினை விசாரித்த ஹைகோர்ட், "வயதான பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்ற காரணத்துக்காக தான பத்திரத்தை (தான செட்டில்மென்ட்) ரத்து செய்ய முடியாது. மேலும், பிள்ளைகள் கவனிக்காவிட்டால், தானப் பத்திரம் செல்லாது என்று எந்த நிபந்தனையையும் மனுதாரர் விதிக்கவில்லை. அதனால் தான பத்திரத்தை ரத்து செய்ய முடியாது" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. உடனே இந்த தீர்ப்பை எதிர்த்து அந்தப் பெண், சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நீதிபதிகள் நேற்றைய தினம் தீர்ப்பு அளித்தனர். பராமரிப்பு : அந்த தீர்ப்பில், "ம.பி. ஹைகோர்ட், சட்டத்தின்படி மட்டுமே ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.. ஆனால், மூத்த குடிமக்களின் உணர்வுகளையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலைக்குரியதாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், பிள்ளைகள் கவனிக்காவிட்டால் "பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தின்"படி பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம். அந்த தான பத்திரத்தை செல்லாது என்றும் அறிவிக்கலாம். புதிய சட்டம்: இந்த சட்டம் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது.. அதனால் கூட்டுக்குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்படும் மூத்த குடிமக்கள் விஷயத்தில் சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதைவிட, அதில் தளர்வுகள் காட்டி சட்டத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும். சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி கொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும்" என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதி தந்துவிட்டு, நடுத்தெருவில் கதிகலங்கி நிற்கும் எத்தனையோ வயதான பெற்றோர்களுக்கு, சுப்ரீம்கோர்ட்டின் இந்த தீர்ப்பானது, மிகுந்த மகிழ்ச்சியையும், ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post