“தமிழகத்தில் அவசர நிலையா? சீப்பை ஒளிச்சு வச்சிட்டா கல்யாணம் நின்னுடுமா?” முதல்வருக்கு சிபிஎம் கேள்வி

post-img
சென்னை: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமல்படுத்தப்பட்டிருக்கிறதா? என்றும், போராட்டங்களுக்கு ஏன் காவல்துறை அனுமதியை மறுக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். சமீப காலமாக போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து திமுக தலைமையிலான தமிழக அரசு மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகளான சிபிஎம், சிபிஐ கட்சிகளின் போராட்டத்திற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது விவாதங்களை கிளப்பியிருந்தது. சென்னையில் ஆண்டு தோறும் பாலின சமத்துவம் எனும் நடைபயணத்தை சிபிஎம் முன்னெடுத்து வந்தது. கடந்த ஆண்டும் நவ.16ம் தேதி இந்த நடைபயணத்தை சிபிஎம் முன்னெடுத்திருந்தது. வடசென்னை, தென்சென்னை மற்றும் மத்திய சென்னை என மூன்று மாவட்ட குழுக்கள் சார்பில் கட்சியினர் நூற்றுக்கணக்கில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகே ஒன்று சேர்ந்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் நடைபயணத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக போலீஸ் தெரிவித்திருந்தது. மட்டுமல்லாது, மீறி நடைப்பயணம் சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் கூறியிருந்தது. இதனால் அன்றைய தினம் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதற்கு முன்னரும், பின்னரும் கூட போலீசார் தொடர்ந்து தோழமை கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி மறுத்திக்கின்றன. அல்லது, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் போராட்டத்தில் பெயரளவுக்கு மட்டும் அனுமதி வழங்கியிருக்கின்றனர். அதேபோல ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலையில் சங்கம் அமைக்க சிஐடியு முன்னெடுத்த போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இதெல்லாம் குறித்த சலசலப்புகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அது விமர்சனமாக வெடித்திருக்கிறது. விழுப்புரத்தில் நடைபெற்ற சிபிஎம் மாநில மாநாட்டு பேரணி பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன், தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று வெளிப்படையாக வெடித்திருக்கிறார். திமுக கூட்டணி கட்சியின் தலைவர் இப்படி வெளிப்படையாக விமர்சித்திருப்பது பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post