எங்களுக்கே தேசபக்தி பாடமா? ஆளுநர் ரவி மன்னிப்பு கேட்கணும்.. சரவெடியாக வெடித்த அமைச்சர் சிவசங்கர்

post-img
சென்னை: "தேச பக்தியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்ததுபோல, தேசிய கீதம் பிரச்சனையை மீண்டும் எழுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. தேச பக்தியில் தமிழ்நாட்டு மக்களைவிட, ஆளுநர் பெரிய ஆள் இல்லை" என காட்டமாகப் பேசியுள்ளார் அமைச்சர் சிவசங்கர். "சட்டப்பேரவை மரபுகளை மாற்ற முயற்சிக்கிறார் ஆளுநர் ரவி. தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் தான். தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதற்காக ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்." என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று நாடகத்தை நடத்தி சென்றிருக்கிறார். சட்டப் பேரவையிலிருந்து வெளியேறியதற்கான விளக்கப் பதிவை எக்ஸ் தளத்தில் நீக்கிவிட்டு மீண்டும் பதிவிட்டது ஏன்?" என மைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையின் மரபின் அடிப்படையில் என்ன நிகழ்வு நடக்க வேண்டுமோ, அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று ஆளுநர் ரவி நினைக்கிறார். அது முடியாது. நியமிக்கப்பட்ட ஆளுநர் என்பதை மறந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் போல் செயல்படுகிறார். தேசத்திற்காக உயிரை அர்ப்பணித்த தலைவர்கள் பல தமிழ்நாட்டில் உள்ளனர். சுதந்திர போராட்டத்தில் முன்னின்றவர்கள் காங்கிரஸ் முதலமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். பாஜகவினரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடிக்கும் வரை எழுந்து நின்றனர். தேசிய கீதத்திற்கு எந்த வகையிலும் தமிழ்நாடு சட்டப்பேரவை பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை விட தான் பெரியவர் என்று நினைப்பு ஆளுநருக்கு இருக்கிறது. திமுகவிற்கு தேச பக்தி பாடம் நடத்த வேண்டிய தேவை ஆளுநருக்கு கிடையாது. தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் ரவி தான். இரண்டு முறை அவர் தான் தேசிய கீதத்தை அவமதித்தவர். அவர் தான் அவர் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆளுநர் பதவியில் நீட்டிப்பு செய்யப்படாத அவர் அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கிறார். 59 பக்கத்தில் அரசின் சாதனைகளை, திட்டங்களை உரையாக தயாரிக்கப்பட்டுள்ளது. திமுக அரசின் சாதனைகளை படிக்க வேண்டும் என்பதால் உரையை வாசிக்காமல் வெளியேறியுள்ளார் ஆளுநர் ரவி. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதை தடுக்கவே ஆளுநர் வெளியேறினார்" என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சட்டசபைக்கு வந்திருந்தார். ஆனால் சட்டப்பேரவை தொடங்கிய உடன் தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் ரவி உடனடியாக வெளியேறினார். இதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். அதன் பிறகு அவை முன்னவர் எழுந்து துரைமுருகன் பேசுகையில், "அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார். தமிழ்நாடு பேரவை மரபுப் படி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் பாடுவதே வழக்கம். ஆளுநரின் செயல்பாடு மூலம் அவரது உள்நோக்கம் என்ன என்பது தெளிவாகிறது." எனத் தெரிவித்தார். மேலும், ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டவை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார் அவை முன்னவர் துரைமுருகன். அந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேறிய பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post