சிரியாவை சாய்த்த மொசாட் உளவாளி! 60 ஆண்டாய் உடலை கேட்டு கெஞ்சும் இஸ்ரேல்.. யார் இந்த எலி கோஹன்?

post-img
ஜெருசலேம்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஹமாஸ், ஹெஸ்புல்லா அமைப்புகளை கதறவிட்ட இஸ்ரேல், ஈரான் எல்லைக்குள் நுழைந்தும் தாக்குதல் நடத்தி உள்ளது. தற்போது சிரியாவிலும் அதிரடி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இப்படியான சூழலில்தான் சிரியாவை ஒற்றை ஆளாக இஸ்ரேலின் மொசாட் உளவாளி வீழ்த்தியதும், அவரது உடல் வேண்டி கடந்த 60 ஆண்டுகளாக சிரியாவிடம் இஸ்ரேல் கெஞ்சி வரும் தகவல் வெளியாகி உள்ளது. அப்படி என்ன செய்தார் அந்த மெசாட் உளவாளி? அவரது உடலை பெற 60 ஆண்டுகளாக சிரியாவிடம், இஸ்ரேல் மன்றாடுவது ஏன்? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். உண்மையில் இந்த தகவல் உங்களை வியக்க வைக்கலாம். ஒரு உளவாளியாக செயல்பட வேண்டும் என்றால் எப்படிப்பட்ட ரிஸ்க் எல்லாம் எடுக்க வேண்டும் என்பது நிச்சயம் உங்களுக்கு புரியும். சரி வாங்க விஷயத்துக்குள் போவோம். இஸ்ரேல்.. மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடுகளால் சூழ்ந்துள்ளது. இந்த இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் யூத நாடாக இருப்பது தான் இஸ்ரேல். இந்த நாட்டின் மக்கள்தொகை என்பது ஒரு கோடியை கூட இன்னும் தொடவில்லை. அதாவது தற்போது இஸ்ரேல் நாட்டின் மக்கள்தொகை என்பது 94 லட்சத்து 53 ஆயிரம் தான். புதிதாக பிறந்த 2025ம் ஆண்டு முடியும் தருவாயில் கூட இந்த நாட்டின் மக்கள்தொகை என்பது 95.17 லட்சமாக தான் இருக்கும். உலகளவில் மொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இஸ்ரேலின் மக்கள்தொகை ஜஸ்ட் 0.12 சதவீதம் தான். அதேபோல் இஸ்ரேல் நிலப்பரப்பிலும்சிறிய நாடு தான். அந்த நாட்டின் நிலப்பரப்பு என்பது 21,640 சதுர கிலோமீட்டர் தான். இப்படி மக்கள்தொகை மற்றும் நிலப்பரப்பில் சிறிய நாடாக இருந்தாலும் கூட இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படையில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் மிகவும் நெருங்கிய நட்பு நாடாக இஸ்ரேல் உள்ளது. இதனால் தான் இஸ்ரேலை இன்று வரை அசைக்க முடியவில்லை. இஸ்ரேல் நாட்டின் எல்லையில் உள்ள பாலஸ்தீனத்தின் காசாவில் தற்போது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ்அமைப்புக்கு எதிராக இந்த போர் தொடங்கி நடந்து வருகிறது. அதேபோல் இன்னொரு எல்லையில் உள்ள லெபனான் நாட்டில் செயல்படும் ஹெஸ்புல்லாவையும் இஸ்ரேல் பதம் பார்த்து வருகிறது. இதுதவிர ஈரானுடன் மோதலை கடைப்பிடித்து வருவதோடு, சிரியாவிலும் கோலன் குன்றுகளை முழுவதுமாக கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல் இறங்கி உள்ளது. ஒரே நேரத்தில் இஸ்ரேலால் எப்படி இத்தனை நாடுகளுடன் மல்லுக்கட்ட முடியும்? என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழலாம். ஆனால் இந்த விஷயத்தில் இஸ்ரேலுக்கு நிகர் அந்த நாடு மட்டும்தான். இதற்கு அந்த நாட்டுக்கு பெரிதும் கைக்கெடுப்பது அந்த நாட்டில் இயங்கி வரும் மொசாட் எனும் உளவு அமைப்பு தான். இஸ்ரேலின் சீக்ரெட் ஆபரேஷன்களுக்கு பெயர் போனவர்கள் தான் இந்த இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பினர். இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வமான உளவு அமைப்பான இந்த மொசாட் எதிரிகளுக்கு உண்மையிலேயே சிம்ம சொப்பணம். எதிரி நாட்டு தலைவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்குள்ளே வைத்து தீர்த்து கட்டுவதில் மிகவும் பெயர் பெற்றவர்கள். அப்படித்தான் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த ஆண்டு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வைத்து இஸ்ரேல் போட்டு தள்ளியது. அதற்கு மொசாட் உளவுத்துறை தான் முக்கிய காரணம். அதற்கு அடுத்தப்படியாக லெபனானில் இயங்கும் ஹெஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்திய 3 ஆயிரம் பேஜர்கள் வெடித்து சிதறின. அதன்பிறகு அடுத்த சில நாட்களில் ஹெஸ்புல்லாவின் வாக்கி டாக்கிகள் வெடித்தன. இதில் 3 ஆயிரம் பயங்கரவாதிகள் காயம் அடைந்தனர். பலர் கொல்லப்பட்டனர். இந்த வாக்கி டாக்கி, பேஜர் வெடிப்புகளை இஸ்ரேலில் இருந்து கொண்டே கனகச்சிதமாக முடித்து வைத்தது யார் என்றால் இந்த மொசாட் உளவு அமைப்பு தான். அதாவது ஹெஸ்புல்லாக்கள் வாங்கும் பேஜர், வாக்கி டாக்கி நிறுவனத்தை கண்டுபிடித்து அதற்குள் வெடிமருந்தை வைத்து வெடிக்க வைத்து யாரும் எதிர்பாராத பதிலடியை இஸ்ரேலில் இருந்தபடியே செய்திருக்கிறார்கள் என்றால், மொசாட் உளவாளிகள் எவ்வளவு பெரிய தந்திரக்காரர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி தந்திரத்துடன் செயல்படும் இந்த இஸ்ரேலின் மொசாட்டில் இருந்த சிறந்த உளவாளியின் உடலை மீட்க ஒன்றல்ல இரண்டல்ல 60 ஆண்டுகளாக இஸ்ரேல் போராடி வருகிறது. அவர் யார்? இஸ்ரேலுக்காக சிரியாவில் புகுந்து சிரிய குடிமகனாகவே மாறி உளவு தகவல்களை திரட்டிய மிகப்பெரிய சாமர்த்தியசாலி அந்த உளவாளி. ஒரு கட்டத்தில் அவரை அடையாளம் கண்ட சிரியா, பப்ளிக்காக தூக்கில் தொங்க விட்டு இஸ்ரேலை அதிர வைத்தது. இருப்பினும், அந்த உளவாளி கொடுத்த தகவலை வைத்து தான், 1967ல் நடந்த 6 நாள் போரில் சிரியாவை வீழ்த்தி அதன் வசம் இருந்த ஹோலன் குன்று பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. யார் அந்த உளவாளி ? அவர் செய்த அசாத்தியமான விஷயம் என்னென்ன? இறுதியில் எப்படி சிரியாவிடம் சிக்கினார்? 60 ஆண்டுகளாக இஸ்ரேல் ஏன் அவரது உடலை போராடுகிறது என்பதை பார்க்கலாம். இஸ்ரேல் மொசாட் உளவாளியின் உண்மையான பெயர் எலி கோஹன். 1924ல் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தார். அடிப்படையில் அவர் யூத குடும்பத்தை சேர்ந்தவர். எலி கோஹன் பிறந்தபோது இஸ்ரேல் என்ற நாடே இல்லை. அதன்பிறகு 1948ல் இஸ்ரேல் நாடு உருவானது. தங்களுக்கு என்று தனிநாடு உருவான மகிழ்ச்சியில் எலி கோஹன் குடும்பத்தினர் எகிப்தில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர். எலி கோஹன் இஸ்ரேல் ராணுவத்தில் சேர்ந்தார். அவர் பல மொழிகளை பிழையின்றி பேசும் திறமை கொண்டவர். ஹிப்ரூ, அரபு, ஸ்பானிஷ், பிரஞ்சு மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். அதேபோல் உளவு பார்ப்பதிலும் வல்லவர். இதனால் அவர் மொசாட் உளவுப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். 1960ம் ஆண்டு துவக்கத்தில் அவரை இஸ்ரேலின் மொசாட் உளவு பிரிவு சேர்த்துக்கொண்டது. அந்த காலக்கட்டத்தில் இஸ்ரேல் - சிரியா இடையே மோதல் நீடித்து வந்தது. இதனால் சிரியாவில் தங்களது சீக்ரெட் ஆப்ரேஷனுக்கு அவரை பயன்படுத்த மொசாட் முடிவு செய்தது. இஸ்ரேலில் இருந்து நேரடியாக சிரியாவுக்குள் சென்றால் சிக்கல் ஏற்படும் என்று மொசாட் நினைத்தது. இதனால் மாற்று திட்டத்தை வகுத்தது. அதன்படி எலி கோஹன் அர்ஜென்டினாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1960ம் ஆண்டே அவர் அர்ஜென்டினா சென்று விட்டார். அர்ஜென்டினாவில் சிரியாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்து இருந்தனர். இப்போதும் 35 லட்சம் சிரிய மக்கள் அங்கு வசிக்கின்றனர். இதனால் மொசாட் அவரை அங்கு அனுப்பியது. அர்ஜென்டினாவில் சிரிய மக்கள் கூட்டத்தில் எலி கோஹன் தன்னையும் சிரியாவை சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தி கொண்டார். சிரியாவில் இஸ்லாமியர்கள் தான் அதிகம் என்பதால் அவர் தனது பெயரை கமெல் அமீன் தாபெட் என்று மாற்றிக்கொண்டார். அரபு மொழியில் அவர் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால் அந்த மொழியிலேயே பேசினார். இதன்மூலம் சிரியா இஸ்லாமியர் என்பதை அவர் காட்டிக்கொண்டார். சிரிய மக்களிடம் தன்னை பெரிய தொழில் அதிபர் போல் நடித்தார். இதனால் சிரியா மக்களிடம் எளிதில் செல்வாக்கு பெற்ற நபராக மாறினார். புலம்பெயர்ந்த சிரிய மக்களுக்கான பிரதிநிதியாக உயர்ந்தார். அர்ஜென்டினாவில் வாழும் சிரிய மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றார். இந்த தகவல் சிரியா வரை பரவியது. இதனால் சிரியாவிலும் அவரது புகழ் ஓங்கியது. இதையடுத்து அடுத்த 2 ஆண்டில், அதாவது 1962ல் சிரியா தலைநகர் டமாஸ்கசுக்கு குடிபெயர்ந்தார். அர்ஜென்டினாவில் தான் சம்பாதித்து வைத்திருந்த பெயர் மூலம் மிக எளிதாக அவருக்கு சிரியா நாட்டின் பிரபலங்கள், அரசியல்வாதிகளின் பழக்கம் என்பது கிடைத்தது. இந்த பழக்கத்தை இன்னும் நெருக்கமாக மாற்றி கொள்ள அவர் சிரியா நாட்டின் அரசியல்வதிகள், ராணுவத்தினர் உள்பட பல்வேறு துறை பிரபலங்களுக்கு அடிக்கடி பார்ட்டி வைத்தார். இந்த பார்ட்டியின் மூலம் அவர் சிரியாவின் ராணுவ ரகசியங்களை அறிந்து கொண்டார். குறிப்பாக, ஆயுதங்கள் இருக்கும் இடம், ராணுவ முகாம்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் இஸ்ரேலுக்கு அனுப்பி வந்தார். இஸ்ரேல், சிரியா எல்லையில் இருக்கும் ஹோலன் குன்றுகள் பற்றிய விவரங்களை முழுமையாக திரட்டி இஸ்ரேலுக்கு கொடுத்தார். இவர் கொடுத்த உளவு தகவலின்படி தான் சிரியாவின் ஹோலன் குன்றுகளை கைப்பற்ற இஸ்ரேல் வியூகம் வகுத்து வந்தது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் எலி கோஹன் சிரியா நாட்டு அரசிடம் சிக்கிவிட்டார். அதாவது 1965 ஜனவரி மாதம் சிரியா மற்றும் சோவியத் (இப்போது ரஷ்யா)உளவு அமைப்பினர் அவரை அடையாளம் கண்டுபிடித்து விட்டனர். எலி கோஹன் இஸ்ரேல் நாட்டின் மொசாட் உளவாளி என்பதை மோப்பம் பிடித்தனர். உண்மையில் அவர் சிரியாவை சேர்ந்த தொழில் அதிபர் கமெல் அமீன் தாபெட் அல்ல என்பதும், இஸ்ரேலின் மொசாட் உளவாளி எலி கோஹன் என்பதும் உறுதியானது. சிரியாவில் உள்ள கோஹன் வீட்டில் அந்நாட்டு அதிகாரிகள், போலீஸ், ராணுவம் ரெய்டு நடத்தியது. பல ஆதாரங்களை கைப்பற்றினர். பல ரகசியங்களை அவர் இஸ்ரேலுக்கு சொன்னதும் தெரியவந்தது. எலி கோஹன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் 1965ம் ஆண்டு மே மாதம் 18 ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸின் மார்ஜே சதுக்கத்தில் பொதுவெளியில் தூக்கிலப்பட்டு கொல்லப்பட்டார். இஸ்ரேல் மட்டும் இன்றி பல நாடுகள் கோஹனுக்கு கருணை காட்ட வேண்டும் என்று கோரின. எல்லாவற்றையும் சிரியா நிராகரித்து அவரை பொதுவெளியில் தூக்கிலிட்டது சிரியா அரசு. இது இஸ்ரேலுக்கு ஆறாத துயரத்தை கொடுத்தது. திறமையான உளவாளியை இழந்து விட்டதை நினைத்து இஸ்ரேலும், அந்த நாட்டின் மெசாட் உளவுப்பிரிவும் கலங்கியது. இதற்கு பதிலடியாக சிரியா மீது 1967ம் ஆண்டில் இஸ்ரேல் போரை தொடங்கியது. சிரியாவுக்கு ஆதரவாக எகிப்து ஜோர்டானும் இணைந்தன. 6 நாட்கள் போர் நடந்தது. இதில் சிரியாவை ஓட ஓட அடித்தது இஸ்ரேல். அதோடு சிரியா வசம் இருந்த ஹோலன் குன்றின் 3ல் 2 பங்கு பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. இந்த ஹோலன் குன்றுகள் என்பது சிரியா மற்றும் இஸ்ரேல் எல்லையில் அமைந்துள்ளது. இஸ்ரேலின் இந்த வெற்றிக்கு சிரியா பற்றி எலி கோஹன் கொடுத்திருந்த ரகசியங்கள் தான் முக்கிய காரணமாக அமைந்தது. எனவே, எலி கோஹன் உடலை தங்கள் நாட்டின் கவுரவமாக இஸ்ரேல் கருதியது. அவர் உடல் தங்கள் நாட்டில் புதைக்கப்பட வேண்டும் என்று விரும்பியது. இதனால் தான் அவரது உடலை கேட்டு சிரியாவிடம் இஸ்ரேல் போராட ஆரம்பித்தது. அதே நேரம், தங்கள் நிலத்தை பறிகொடுத்த சிரியா, எலி கோஹன் உடலை இஸ்ரேலிடம் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. இஸ்ரேல் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக எலி கோஹன் புதைக்கப்பட்ட இடத்தை ரகசியமாக வைத்தது. அதனை இஸ்ரேல் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து அடிக்கடி அவரது உடலை தோண்டி பிற இடங்களில் மாற்றி மாற்றி புதைத்தது சிரியா. ஒரு வழியாக 50 ஆண்டுகள் கழித்து 2018ல் மொசாட் உளவு அமைப்பு நடத்திய சீக்ரெட் ஆப்ரேஷனில் எலி கோஹன் அணிந்திருந்த கைக்கடிகரத்தை இஸ்ரேல் கைப்பற்றியது. அதை பத்திரமாக இஸ்ரேலுக்கு மீட்டு வந்து ஒப்படைத்தது மொசாட். இதற்கிடையே தான் தற்போது சிரியா அதிபர் பஷர் அல் அசாத் வீழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் எலி கோஹன் உடலை கைப்பற்றும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கி உள்ளது. எலி கோஹன் சடலத்தின் எச்சத்தை தரும்படி இஸ்ரேல் மீண்டும் வலியுறுத்த தொடங்கி உள்ளது. இது தொடர்பாக ஆசாத் அரசாங்கத்தின் உயர் பதவி வகித்தவர்களிடம் இஸ்ரேல் அரசாங்கம் பேசி வருகிறது. மொசாட் அமைப்பின் இயக்குனர் டேவிட் பார்னியாவே நேரடியாக பேசி வருகிறார். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்காக இஸ்ரேல், சிரியாவுக்கு மீடியேட்டராக ரஷ்யாவும் உதவி வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. 60 ஆண்டுகள் கழித்து இஸ்ரேலுக்கு எலி கோஹன் உடலின் எச்சங்கள் கிடைக்குமா? இல்லையா? என்பதை அறிய நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post