நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கு! கடைசி நிமிடத்தில் ட்விஸ்ட்.. நீதிமன்றம் முக்கிய உத்தரவு

post-img
சென்னை: திருமண ஆவணப் படத்தில் 'நானும் ரவுடிதான்' பட பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக, நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 22 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்தில், நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி, வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ், முன்பு விசாரணைக்கு வந்தபோது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்றும், அன்றைய தினம் அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிவைத்தார். தனுஷ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 'நானும் ரவுடிதான்' எனும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். படம் செம ஹிட் கொடுத்தது. ஆனால் படம் திட்டமிட்ட தேதியில் முடித்து கொடுக்க விக்னேஷ் சிவன் தவறிவிட்டார் என்று பேச்சு அடிபட்டது. இதனால் தனுஷ் தரப்புக்கு கூடுதலாக செலவானது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மறுபுறம் இந்த திரைப்படத்தில்தான் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்ததாகவும் சொல்லப்படுகிறது. கூட்டி கழித்து பார்த்தால், என்னுடைய பணத்தின் மூலம் தயாரிக்கப்படும் திரைப்படத்தில் நீங்கள் காதலிப்பதா? என்று தனுஷ் கோபத்தில் பொங்கியிருந்ததாகவும், ஆனால் அதை வெளிப்படுத்தவில்லை என்று திரைப்பிரபலங்கள் கூறியிருந்தனர். மறுபுறம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் செய்துக்கொண்டனர். இந்த திருமணத்தின் வீடியோ பதிவை ஆவணப்படமாக நெட்பிளிக்ஸ் வெளியிட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தில் 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாகவும், அதற்கான என்னிடம் அனுமதி பெறவில்லை என்றும் கூறி ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ், நயன்தாரா தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீஸ் விவாதப்பொருளாக வெடித்தது. 'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சிகளை பயன்படுத்த ஏற்கெனவே தனுஷிடம் அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால் வேண்டும் என்றே எந்த பதிலும் கொடுக்காமல், இப்போது ஆவணப்படம் வெளியானபோது நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறி நயன்தாரா அறிக்கையின் மூலம் பதிலடி கொடுத்திருந்தார். வெறும் 3 விநாடி காட்சிகளுக்காக ரூ.10 கோடிவரை கேட்பதா? என்று கொந்தளித்த நயன்தாரா, 'Schadenfreude' எனும் ஜெர்மன் வார்த்தையை பயன்படுத்தி தனுஷை திட்டியிருந்தார். இதற்கு 'பிறரது துன்பத்தில் இன்பம் காணுதல்' என்று பொருள் என குறிப்பிட்ட நயன்தாரா, நானும் எனது கணவரும் படும் துன்பத்தை பார்த்து நீங்கள் இன்பமடைகிறீர்கள் எனவும் காட்டமாக அறிக்கை வாயிலாக பேசியிருந்தார். மறுபுறம் தனுஷ் இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். கடந்த டிசம்பர் 12ம் தேதி வழக்கு விசாரணை வந்தபோது, நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை நீதிமன்றம் இன்றைய தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. தற்போது மீண்டும் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post