திருக்குறளுக்கு உரை.. மணக்குடவர் தொடங்கி கருணாநிதி வரிசையில் சாதிக்கும் கவிப்பேரரசு வைரமுத்து!

post-img
சென்னை: தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாக திகழ்வது உலகப் பொதுமறையான திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு அடிகளில் வாழ்வியல் நூலான திருக்குறளைப் படைத்தவர் திருவள்ளுவர். திருக்குறளுக்கு மணக்குடவர் தொடங்கி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வரை எண்ணற்றோர் விளக்க உரை எழுதி இருக்கின்றனர். இந்த வரிசையில் தற்போது கவிப்பேரரசு வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுத தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார். தமிழ் மொழியில் தலை சிறந்த நூல் திருக்குறள். தமிழ் நூல்களில் திருக்குறளுக்கான தனித்த சிறப்பு என்பது கிபி 10-ம் ஆண்டு நூற்றாண்டு முதல் இன்றைய கிபி 21-ம் நூற்றாண்டு வரை பல்வேறு புலவர்கள், அறிஞர் பெருமக்கள் திருக்குறளுக்கு காலத்திற்கேற்ப உரை எழுதி அடுத்த தலைமுறைக்கு தொடர்ந்து கொண்டு சேர்ப்பதுதான். திருக்குறளுக்கு இதுவரை எத்தனை பேர் உரை எழுதி இருக்கின்றனர்? பொதுவாக திருக்குறளுக்கு பரிமேழலகர் உரையை பழமையானதாக கருதுகிறோம். ஆனால் பரிமேழகருக்கு முன்னரே 9 உரைகள் திருக்குறளுக்கு எழுதப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பரிமேழகர் உரையே 10-வதுதான் என்கிற கருத்தும் உண்டு. "தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி பரிமே லழகர் - திருமலையர் மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்கு எல்லையுரை செய்தார் இவர்" - இவர்கள் அனைவரும் திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள்தான். திருக்குறளுக்கு தனித்த உரைகளை எழுதிய பெருமக்கள் அல்லாமல் இளங்கோ அடிகள், சீத்தலைச் சாத்தனார், சேக்கிழார், கம்பர் என எண்ணற்றோர் தங்கள் படைத்த இலக்கியங்களில் சில குறள்களுக்கு தனித்துவமான விளக்கமும் தந்திருப்பதும் சிறப்பானதாகும். திருக்குறளுக்கான தனி உரைகளை பலரும் எழுதக் காரணம் குறித்து அறிஞர் வ.சு.ப. மாணிக்கம் கூறுகையில், முன்னோன் எழுதிய உரைப்பொருளைப் பெரிதும் தழுவக்கூடாது; தாம் ஒரு தனியுரை எழுதத் துணிந்ததற்குச் சான்றாக எங்ஙனமேனும் பல குறட்குப் புத்துரை சொல்ல வேண்டும் என்னும் முனைப்பே திருக்குறள் உரை பலவற்றின் தோற்றத்துக்குக் காரணம் என்று சுருங்கச் சொல்லலாம். (எந்தச் சிலம்பு (1964) பக்கம் 40,41) என்கிறார். தருமர், தாமத்தர், பரிதி, திருமாலியர், பரிப்பெருமாள், மணக்குடவர், நச்சர், பரிமேலழகர், மல்லர், காலிங்கர் ஆகியோரது திருக்குறளுக்கான உரைகள் பழமையானவை போறப்படுகின்றன. 1990களுக்குப் பின்னர் வ.உ.சி, திருவிக, கி.ஆ.பெ. விசுவநாதம், தேவநேயப் பாவாணர், மு.வரதராசனார், இரா.சாரங்கபாணி, தெ.பொ. மீனாட்சி சுந்தரம், வ.சு.ப.மாணிக்கம், குன்றக்குடி அடிகளார், தமிழண்ணல், சாலமன் பாப்பையா, ஆரூர்தாஸ், அ.ம.சாமி, க.ப.அறவாணன், கலைஞர் கருணாநிதி என எண்ணற்றோர் திருக்குறளுக்கு புதிய உரைகளை எழுதி இருக்கின்றனர். தமிழின் ஆகத் தொன்மை இலக்கியமான திருக்குறளுக்கு தற்போது புதிய உரை எழுதுகிறார் கவிப்பேரரசு வைரமுத்து. இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளதாவது: திருக்குறளுக்கு உரை எழுதப் போகிறேன் என்று கன்னியாகுமரியில் அறிவித்தேன். உரை எழுதத் தொடங்கிவிட்டேன். உரை செய்யப் புகுமுன்னால் சில உரைநெறிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். திருக்குறளின் மூலத்திற்கும் திருவள்ளுர் காலத்திற்கும் மெய்யோடிருத்தல் வேண்டும்; அறத்துப் பாலும் பொருட்பாலும் அறிவுப் பொருளாகத் திகழ வேண்டும்; காமத்துப் பால் கவிதைப் பொருளாக விளங்க வேண்டும். மூலத்தின் அறிவும் செறிவும் விரிவும் ஓசை நயத்தோடு துலங்க வேண்டும்; எவ்வளவு இயலுமோ அவ்வளவு தனித்தமிழே ஆளப் பெறுதல் வேண்டும்; பழைய தலைமுறை மதிக்க வேண்டும்; புதிய தலைமுறை துய்க்க வேண்டும்; தமிழ் அருள் புரியும் என தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post