கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுயநலவாதிகள்.. கம்யூனிச கொள்கை நீர்த்து போய்விட்டது! சர்ச்சையை கிளப்பிய ஆ ராசா

post-img
சென்னை: திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகளுக்கும் திமுகவுக்கும் இடையே ஏற்கனவே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் கம்யூனிச தலைவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதாகவும் இதனால் கம்யூனிச கொள்கைகள் நீர்த்துப்போய் விட்டதாகவும் திமுக எம்பி ஆ. ராசா பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. சென்னையில் பச்சையப்பன் கல்லூரில் நடந்த பச்சையப்பன் வாசகர் வட்டம் 7ஆம் ஆண்டு நிறைவு விழாவில் திமுக எம்பியும் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ஆ. ராசா கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதாகவும் இதனால் கம்யூனிச கொள்கைகள் நீர்த்துப் போய்விட்டதாகவும் பேசியது அரசியல் அரங்கில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆ. ராசா, "சமூகமாக வாழும் மக்கள் அனைவரும் தொழில்களைப் பிரித்துக் கொள்வது என்பதே உலக தத்துவம், ஆனால், இந்து மதத்தில் மட்டும் குறிப்பிட்ட தொழில்களைக் குறிப்பிட்ட நபர்கள் தான் செய்ய வேண்டும் எனப் பிரித்து அதைப் பிறப்போடு வைத்து இருக்கிறார்கள். எனது தாத்தா படிக்காத நபர். அவர் பிழைப்புக்காக இலங்கைக்குப் போனார். எனது அப்பா இலங்கையில் ஆங்கிலம் படித்துவிட்டு இங்கே வந்தார். நான் இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக உங்கள் முன்பு நிற்கிறேன். இன்று நான் பேசும் ஆங்கிலத்தில் யாராலும் குறை சொல்ல முடியாது. இத்தனைக்கும் நான் தனியார்ப் பள்ளியில் காலை கூட வைத்தது இல்லை. எங்கோ மூளையில் இருக்கும் கல்லூரியில் படித்தேன். இது திராவிடத்தால் மட்டுமே கிடைத்தது. அன்று தீண்டாமையாலும், ஏழ்மையாலும் நாட்டை விட்டு ஓடிய நபரின் மகன் நான். இன்று எனது மகள் சாதி என்றால் என்னவென்றே தெரியாமல் லண்டனில் படித்துக்கொண்டு இருக்கிறார். எப்போதும் தத்துவம் மீது தலைவர்களின் நம்பிக்கை குறையத் தொடங்கினால் தத்துவம் தோற்றுவிடும். கம்யூனிசத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.. இதுவரை கம்யூனிச கொள்கையில் எந்தவொரு கோளாறும் இல்லை.. கம்யூனிசம் செம்மையான கொள்கையாகவே இருக்கிறது. ஆனால், அதை முன்னெடுக்கும் தலைவர்கள் நீர்த்துப் போய்விட்டார்கள். சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள். இதனால் மக்களிடையே கம்யூனிச தத்துவங்கள் நீர்த்துப் போய்விட்டது. அதேநேரம் திராவிடம் அப்படி இல்லை. திராவிட தத்துவத்தை நமக்குப் பெரியார் கொடுத்தார். அதைப் பேரறிஞர் அண்ணா அரியணையில் ஏற்றினார். அதன் பிறகு வந்த கருணாநிதியும் திராவிட தத்துவங்களைத் திட்டங்களாகக் கொண்டு வந்தார். இத்தனை நாட்கள் அண்ணா போலப் பேச ஸ்டாலினால் முடியுமா? கருணாநிதியைப் போல எழுத ஸ்டாலினால் முடியுமா? எனக் கேட்டார்கள்.. ஆனால், இப்போது அதை விட்டுவிட்டு ஸ்டாலின் போல உதயநிதி உழைத்தாரா? அவருக்கு எதற்குப் பதவி எனக் கேட்க ஆரம்பித்து விட்டனர். எங்கள் தாத்தா கொடுத்த கொள்கையை நாங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொண்டால் போதும். இன்றைய காலகட்டத்தில் புதிய தத்துவத்தைத் தரும் தலைவர்கள் யாரும் இல்லை. ஆனால் தத்துவத்தைக் காப்பாற்றும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். எங்கள் தத்துவத்திற்குச் சேதாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் இன்னொரு தலைவருமாக உதயநிதி இருக்கிறார். திராவிடம் எப்போதும் தோற்காது'' என்றார் முன்னதாக விழுப்புரத்தில் நடந்த சிபிஎம் பொதுக்கூட்டத்தில் பேசிய கே பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா என்று கடுமையாகப் பேசியிருந்தார். அதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது ஆ ராசாவும் இப்படிப் பேசியுள்ளது சர்ச்சையாகியிருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post