விமானத்தை சுட்டது ரஷ்யா தான்.. குற்றத்தை ஒப்புக்கொள்ளுங்க.. அஜர்பைஜான் அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

post-img
அத்வா: கஜகஸ்தானில் அஜர்பைஜான் விமானம் அவசரமாக தரை இறங்க முயன்றபோது மோதி தீப்பிடித்து பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்த விமானத்தை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கடந்த 25 ஆம் தேதி அஜா்பைஜான் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான எம்ப்ரேயர் 190 என்ற விமானம் ஒன்று, பயணிகள் 62 பேர் உட்பட 67 பேருடன் தலைநகர் பாக்குவில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்டது. கஜகஸ்தானில் உள்ள அக்தா நகர விமான நிலையம் அருகே அது பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானிகள் முயன்றனர். ஆனால், தரையிறங்குவதற்கு முன்னதாக அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி வெடித்தது. இதில் 38 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பறவைகள் மோதியதால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. அதன்பிறகு, வான் பாதுகாப்பு சிஸ்டம் அல்லது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. அதற்கான அடையாளங்கள் விமானத்தில் தென்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டது. இதில் ஏவுகணையை ஏவியிருக்கலாம் என உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின. இதற்கிடையே சில ஊடகங்கள் இதை ரஷ்யாவே தவறுதலாக செய்ததாக சுட்டிக்காட்டின. இந்நிலையில், அஜர்பைஜான் விமான விபத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புதின் மாளிகை வெளியிட்டஅறிக்கையில், "ரஷ்யாவின் வான் பகுதிக்குள் நடந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்தார். மேலும், விமான விபத்து ஏற்பட்ட நேரத்தில் கிரோஸ்னி, மொஸ்டோக், விளாடிகாவ்காஸ் ஆகியவற்றின் மீது உக்ரைனின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இதற்கு ரஷ்யாவின் வான் பாதுகாப்பு சிஸ்டம் பதிலடி தாக்குதல் நடத்தியது. விபத்திற்கு முன்னர் பயணிகள் விமானம் க்ரோஸ்னியில் தரையிறங்க முயன்றபோது ரஷிய விமானப்படை அங்கு பயிற்சியில் ஈடுபட்டது எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் விமானம் மீது தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில், விமான விபத்து குறித்து அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அஜர்பைஜான் தொலைக்காட்சியிடம் பேசியுள்ள அவர், அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதை பற்றிய உண்மையை மூடி மறைக்க ரஷ்யாவில் உள்ள சிலர் விபத்திற்கான காரணங்களைப் பற்றி பொய்யான கதைகளை பரப்பி வருகின்றனர். விமானம் ரஷ்யாவால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று தெளிவாகவே சொல்லலாம். ஆனால், இது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று நாங்கள் கூறவில்லை, ஆனால் அது சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை. குற்றத்தை ஒப்புக்கொள்வது, நட்பு நாடாகக் கருதப்படும் அஜர்பைஜானிடம் உரிய நேரத்தில் மன்னிப்பு கேட்பது, இதைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவது இவை தான் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள். ரஷ்ய தரப்பு அஜர்பைஜானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு காரணமான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், மற்றும் அஜர்பைஜானி அரசு, காயமடைந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post