179 பேர் பலி: தென் கொரிய விமான நிலையத்தில் ஓடுபாதை முடிவில் கான்கிரீட் சுவர் இருந்தது ஏன்?

post-img
தென் கொரியாவில் 179 பேர் பலியான விமான விபத்தில் ஓடுபாதை முடிவில் "அசாதாரணமான" கான்கிரீட் சுவர் குறித்தும் அதன் பங்கு குறித்தும் விமான நிபுணர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜேஜூ ஏர் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி தீப்பிடித்து எரிவதை சில காட்சிகள் காட்டுகின்றன. தென் கொரியாவில் ஏற்பட்ட மிக மோசமான விமான விபத்துக்கான காரணத்தை ஆராயும் அதிகாரிகள், ஓடுபாதையின் எல்லையில் இருந்து 250 மீ (820 அடி) தொலைவில் கான்கிரீட் சுவர் உள்ள இடத்தின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து வருகின்றனர். விமான பாதுகாப்பு நிபுணர் டேவிட் லியர்மவுண்ட், 'தடை' இல்லாதிருந்தால், விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருக்கும். மேலும் அதில் இருந்தவர்களில் பெரும்பாலான மக்கள் தப்பித்திருக்கலாம். ஒருவேளை அனைவரும் கூட உயிர் பிழைத்திருப்பார்கள் என்று கூறினார். விமானம் ஒரு பறவை மீது மோதியதாக விமானி அறிவித்தார். பின்னர் தரையிறக்க வேண்டிய இடத்தில் தரையிறக்காமல், எதிர் திசையில் இருந்து தரையிறங்க அனுமதி கோரினார். விமானம் 2,800 மீட்டர் ஓடுபாதையில் கீழிறங்கியது. தனது சக்கரங்கள் அல்லது லேண்டிங் கியர் இல்லாமல் விமானம் தரையிறங்கியது ''லேண்டிங் கியர் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் விமானம் நன்றாக தரையிறங்கியது. இதற்கு காரணம் விமானத்தின் இறக்கைகள் சமமாக இருந்தன, விமானத்தின் வால் போன்ற பின் பகுதியில் ஏற்படும் சேதத்தைத் தவிர்ப்பதற்காக விமானத்தின் முன்பகுதி மிக உயரமாக உயர்த்தப்படவில்லை. மேலும் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு போனாலும், விமானத்திற்கு அதிக சேதம் எதுவும் ஏற்படவில்லை'' என்கிறார் லியர்மவுண்ட் "இத்தனை பேர் இறந்ததற்குக் காரணம் தரையிறக்கம் அல்ல, ஆனால் ஓடுபாதையின் எல்லைக்கு அப்பால் இருந்த கடினமான தடை (சுவர்) ஒன்றில் விமானம் மோதியதுதான் " என்றும் அவர் கூறினார். லுஃப்தான்சா விமான நிறுவன விமானி கிறிஸ்டியன் பெக்கர்ட், அந்த கான்கிரீட் கட்டமைப்பை "அசாதாரணமான" கட்டமைப்பு என்று அழைத்தார். அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், "பொதுவாக, விமான நிலைய ஓடுபாதையின் முடிவில் சுவர் இருக்காது "என்றும் தெரிவித்தார். இந்த கான்கிரீட் கட்டமைப்பானது விமானம் தரையிறங்குவதற்கு உதவும் லோக்கலைசர் அமைப்பைக் கொண்டுள்ளது என தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது மண்ணால் மூடப்பட்ட அந்த கான்கிரீட் அமைப்பு 4 மீட்டர் உயரம் கொண்டது. ஓடுபாதையின் அதே அளவில் லோக்கலைசரை வைத்திருக்க இது உயர்த்தப்பட்டது. வழிகாட்டும் அமைப்பு சரியாக வேலை செய்வதை உறுதிசெய்ய இப்படி அமைக்கப்பட்டுள்ளது என யோன்ஹாப் கூறுகிறது தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம், நாட்டின் பிற விமான நிலையங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் கான்கிரீட் கட்டமைப்புகளுடன் உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது. இருப்பினும், அவை எளிதில் உடைந்து விடும் அளவிலான எடை குறைவான பொருட்களால் செய்யப்பட்டிருக்குமா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். விபத்துக்குள்ளான விமானத்தைப் போன்ற அதே வகையான விமானங்களை ஓட்டிய 48 வருட அனுபவமுள்ள விமானி கிறிஸ் கிங்ஸ்வுட், ''ஓடுபாதையின் ஒரு குறிப்பிட்ட எல்லை மற்றும் தூரத்தில் உள்ள தடைகள் உடையக்கூடியதாக இருக்க வேண்டும், அதாவது ஒரு விமானம் அதில் மோதினால் அந்த கான்கிரீட் தடை உடைய வேண்டும்" என்று பிபிசியிடம் கூறினார். "இந்த கடினமான கான்கிரீட் கட்டமைப்பு அசாதாரணமாகத் தெரிகிறது. நான் புரிந்துகொண்டபடி, விமானம் மிக வேகமாகப் பயணித்தது, ஓடுபாதையில் நீண்ட தூரம் தரையிறங்கியது, எனவே அது ஓடுபாதையின் முடிவைக் கடந்து வெகுதூரம் சென்றிருக்கும். அப்படியென்றால் தடைகள் எங்கு வைக்கப்பட வேண்டும்? அது நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், "விமானங்கள் இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால் அவை திறமையாக பறக்க முடியும். விமானத்தின் நடுப்பகுதி அதிவேகமாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. விமானத்தின் முக்கியப்பகுதியில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் தாக்கினால் அது பேரழிவுக்கு வழிவகுக்கும்" என்றார். மேலும் "விமானத்தின் எரிபொருள், அதன் இறக்கைகளில் வைக்கப்படுகிறது, எனவே இறக்கை உடைந்தவுடன், தீ பற்றுவதற்கான சாத்தியமும் குறிப்பிடத்தக்கது. எனவே, சுவர் இல்லாதிருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்றும் பொருள் கொள்ள முடியாது" என்றும் அவர் தெரிவித்தார். மேலும் "தொழில்துறையின் தரத்திற்கு ஏற்ப அனைத்து தேவைகளையும் விமானநிலையம் பூர்த்தி செய்யவில்லை என்று தெரியவந்தால் ஆச்சரியப்படுவேன்" என்கிறார் கிங்ஸ்வுட். "பல சர்வதேச விமான நிலையங்களில் உள்ள விமானத் தளங்களை ஆராயும்போது, ஆபத்துகளை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டப்படும் பல தடைகளை நம்மால் கண்டுபிடிக்க இயலும் என்று நான் சந்தேகிக்கிறேன்," என்று கிங்ஸ்வுட் மேலும் கூறினார். விமானப் பகுப்பாய்வாளர் சாலி கெதின், விமானம் வழக்கமான தரையிறங்கும் திசையில் இருந்து எதிர் திசையில் தரையிறங்கியதை கருத்தில் கொண்டு, தடை இருப்பது விமானிக்குத் தெரியுமா என்று கேள்வி எழுப்பினார். "இறுதியில் இந்த கடினமான தடை இருப்பதை விமானிகள் அறிந்திருந்தார்களா?'' என்கிறார் அவர் "வழக்கமாக தரையிறங்கும் திசையில் அல்லாமல் மறு திசையில் தரையிறங்க கட்டுப்பாட்டு அமைப்புகளால் அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தால், அது கருப்பு பெட்டிகளின் விசாரணையில் வெளிவர வேண்டும்" என்றார். மேலும் "பல கேள்விகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்"என்று சாலி கெதின் பிபிசியிடம் தெரிவித்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post