2025ல் மிஸ் பண்ணக்கூடாத வானியல் அதிசயங்கள்! தேதியை குறிச்சிக்கோங்க மக்களே!

post-img
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் வானியல் அதிசயங்கள் நடக்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மிஸ் பண்ணக்கூடாத வானியல் நிகழ்வுகள் இந்த செய்தியில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. கிரகணங்கள்: இந்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ இருக்கின்றன. முதலில் வருவது சந்திர கிரகணம்தான். மார்ச் மாதம் 14ம் தேதியன்று சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும். ஆனால், அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா, மற்றும் வடக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளில்தான் கிரகணம் தெரியும். இந்தியாவிலிருந்து கிரகணத்தை பார்க்க முடியாது. சந்திர கிரகணத்தை தொடர்ந்து, சூரிய கிரகணம் நடைபெறுகிறது. இதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது. மார்ச் மாதம் 29ம் நிகழும் சூரிய கிரகணத்தை, வட அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், ஐரோப்பா மற்றும் வடமேற்கு ரஷ்யாவில் இருந்தால் பார்க்கலாம். இதுவும் இந்தியாவில் தெரியாது. கிரகணத்தை எப்போது பார்ப்பது?: செப்டம்பர் மாதம் 7-8ம் தேதிகளில் முழு சந்திர கிரகணம் வருகிறது. இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும். அன்றைய தினம் சந்திரன் ரத்த நிறத்தில் காட்சியளிக்கிறது. இது இந்தியா மட்டுமல்லாது ஆசியாவின் பிற நாடுகளிலும், ஐரோப்பா, அண்டார்டிகா, மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் தெரியும். எப்போதுமே சந்திர கிரகணத்தை தொடர்ந்து சூரிய கிரகணம் நடக்கும். அந்த வகையில் செப்டம்பர் மாதம் 21-22ம் தேதிகளில் சூரிய கிரகணம் நடைபெறும். நியூசிலாந்து, கிழக்கு மெலனேசியா, தெற்கு பாலினேசியா மற்றும் மேற்கு அண்டார்டிகாவில் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். இந்தியாவில் பார்க்க முடியாது. இவை இந்த ஆண்டின் முக்கிய வானியல் நிகழ்வாக இருக்கிறது. செவ்வாய்: இது தவிர, வேறு சில வானியல் நிகழ்வுகளும் நடக்கிறது. அதாவது ஜன.15-16ம் தேதிகளில் செவ்வாய் கிரகம் வழக்கத்தை விட பிரகாசமாக தெரியும். காரணம், சூரிய ஒளி நேரடியாக செவ்வாய் மீது விழுந்து அது பூமிக்கு எதிரொலிக்கிறது. எனவே, மற்ற நாட்களை பார்ப்பதை விட இந்த நாட்களில் செவ்வாய் கிரகத்தை தெளிவாக பார்க்க முடியும். நீங்கள் கிரகங்களை போட்டோ எடுப்பவராக இருந்தால், தேதி குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. இந்த தேதிதான் மிகச்சரியான தேதி. தவற விட்டால் 812 நாட்கள் அதாவது 2.1 ஆண்டுகள் இந்த நாளுக்காக காத்திருக்க வேண்டும். 7 கோள்களும் ஒரே கோட்டில்: அதேபோல பிப்ரவரி 28ம் தேதி அனைத்து கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நிற்கும் அதிசயம் நடக்கிறது. புதன். வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என 7 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் தெரியும். உண்மையில் கிரகங்கள் இப்படி நேர்க்கோட்டில் இருக்காது. ஆனால் பூமியிலிருந்து பார்ப்பதற்கு நேர்க்கோட்டில் இருப்பதை போன்று தெரியும். கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதுபோன்ற நிகழ்வு பதிவாகியிருந்தது. இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியும். ஆனால் வெள்ளி, செவ்வாய், வியாழன் மட்டுமே வெறும் கண்களுக்கு நன்றாக தெரியும். தவிர, ஜனவரி 3-4ம் தேதிகளில் ஒரு மணி நேரத்திற்கு 80-120 விண்கற்கள் பூமி மீது மோதும். வானத்தில் பார்ப்பதற்கு அதிசயமாக இருக்கும். ஆகஸ்ட் மாதம் 12-13ம் தேதிகளில் 'பெர்சீட்ஸ்' விண்கல் மழையும், டிசம்பர் 14-15ம் தேதிகளில் 'ஜெமினிட்ஸ்' விண்கல் மழை பொழியும். இந்த சமயத்தில் ஒரு மணி நேரத்திற்கு 150 விண்கற்கள் பூமி மீது பொழியும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post