செவல தாவுடா தாவு.. கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அலறி அடித்து ஓட்டம்! மிரட்டிய சிசிடிவி!

post-img
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்க கதவை உடைத்துக்கொண்டு திருடர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து அதனை சிசிடிவி மூலம் கவனித்த உரிமையாளர், பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் கூச்சலிட்டதால் திருடர்கள் கொள்ளை அடிக்காமல் தப்பி ஓடியுள்ளனர். பல குற்றச் சம்பவங்கள், சிசிடிவி கேமரா வாயிலாக வெளிச்சத்துக்கு வருகின்றன. மனிதர்கள் கவனிக்காதவற்றையும், துல்லியமாக காட்டி, சிக்க வைத்து விடுகிறது சிசிடிவி. பல குற்றச் சம்பவங்களில், குற்றவாளிகளை கண்டறிவதில் போலீசாருக்கு பேருதவி புரிகின்றன சிசிடிவி கேமராக்கள். கொள்ளை அடிக்கச் செல்லும் திருடர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் முக்கியமாக பயப்படும் விஷயமே சிசிடிவி கேமராவாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் நாகர்கோவிலில், ஒரு கொள்ளைச் சம்பவத்தை தடுத்து நிறுத்தியுள்ளது சிசிடிவி கேமரா. நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள சலீம் என்பவர், தனது வீட்டுக்கு வெளியிலும், வீட்டுக்கு உள்ளேயும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வைத்திருந்துள்ளார். அதன் மூலம் தான் வெளிநாட்டில் இருந்தபடியே, தனது வீட்டை கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில், சலீம் வீட்டில் கொள்ளையடிக்க கதவை உடைத்துக் கொண்டு திருடர்கள் சிலர் உள்ளே நுழைந்துள்ளனர். அதனை வெளிநாட்டில் இருந்து சிசிடிவி மூலம் நேரலையில் கவனித்த சலீம், உடனடியாக, கோட்டாரில் உள்ள தனது பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, பக்கத்து வீட்டுக்காரர்கள், "திருடன்.. திருடன்.." என கூச்சலிட்டுள்ளனர். மாட்டிக் கொண்டோம் என பயந்த திருடர்கள் உடனடியாக பின் கதவு வழியாக தப்பி ஓடியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமராவில் திருடர்களின் முகம் பதிவான நிலையில் அதனைக் கொண்டு அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், வெளிநாட்டில் இருந்தாலும், நமது வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த சிசிடிவி கேமரா உதவுகிறது. தொழில் நுட்பத்தால் ஏற்பட்ட ஒரு நன்மை இது என பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post