சாவர்க்கர் வாழ்க்கையில் இரண்டு தமிழர்களின் பங்கு.. பாஜகவின் எஸ்ஜி சூர்யா பரபரப்பு பேச்சு

post-img
சென்னை: சாவர்க்கர் வாழ்க்கையில் இரண்டு தமிழர்களின் பங்கு முக்கியமானது. தமிழகத்தைச் சேர்ந்த எம்பிடி ஆச்சார்யா, விவிஎஸ் ஐயர் ஆகிய இருவரும் சாவர்க்கருடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறினார். "வீர சாவர்க்கர் ஒரு கலகக்காரனின் கதை" நூல் வெளியீட்டு விழா பேசும் போது, சாவர்க்கருக்கும், தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து எஸ்ஜி சூர்யா கூறினார். பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா எழுதிய "வீர சாவர்க்கர் ஒரு கலகக்காரனின் கதை" நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னை தியாகராயநகரில் நடந்தது. இந்த விழாவில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் புத்தகத்தை வெளியிட, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதனை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், ரங்கராஜ் பாண்டே, கோலாகலா ஸ்ரீநிவாஸ், கே.டி.ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா பேசுகையில், எனக்கு முதன் முதலில் 5ம் வகுப்பு படிக்கும் போது சாவர்க்கர் பற்றி அறிமுகம் கிடைத்தது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில்தான் படித்தேன். அங்கு பள்ளியில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த பேச்சுப் போட்டியில் நான் பங்கேற்றிருந்தேன். என்னுடைய தாத்தா எனக்கு சாவர்க்கர் பற்றிய குறிப்பை எழுதிக் கொடுத்திருந்தார். பிற மாணவர்கள் காந்தி, நேரு, மகாகவி பாரதியர் குறித்து பேசினார்கள், அதில் நான் மட்டும் தான் சாவர்க்கர் பற்றி பேசினேன். அப்போது ஆச்சர்யம் என்னவென்றால், என்னுடைய ஆசிரியருக்கு கூட சாவர்க்கர் யார் என்று தெரியவில்லை. ஆனால் நான் தான் அனைவரையும் விட வித்தியாசமாக பேசினேன் என்பதால் எனக்கு அந்த போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. நான் சாவர்க்கர் குறித்து புத்தகம் எழுத காரணமாக இருந்ததே பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தான். 2016ம் ஆண்டு தேர்தல் பணிகளின் போது ஒருநாள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தமிழகத்தில் மட்டும் சாவர்க்கர் குறித்து யாருமே எதுவும் எழுதவில்லை என்ற எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். அப்போது அவர் யாருமே எழுதவில்லை என்றால் என்ன, நீ எழுது என்று என்னிடம் கூறினார். . அன்று அவர் கூறிய அந்த வார்த்தைகள் தான் இந்த புத்தகம் உருவாக உந்துதலாக அமைந்தது என்றார். மகாராஷ்டிராவின் புனேவில் படித்த போது வர்க்கர் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். அங்கு சாவர்க்கர் மிகவும் பிரபலமான தலைவர். மகாராஷ்டிராவில் உள்ள ஒரு காங்கிரஸ்காரர் கூட சாவர்க்கரைப் பற்றி தவறாக பேசிவிடமாட்டார்கள். ஏனெனில் மராட்டியர்கள் சாவர்க்கரை உண்மையாக நேசிக்கக்கூடியவர்கள், அதனால் அங்கு வாக்கு வங்கிக்கான தலைவராகவும் சாவர்க்கர் திகழ்கிறார். தமிழகத்தில் வி.வி.எஸ். ஐயர் பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவர் சாவர்க்கர் உடைய முக்கியமான தளபதிகளில் ஒருவராக இருந்தவர். இந்த உண்மை கூட தமிழகத்தில் வி.வி.எஸ். ஐயர் பற்றி பேசுபவர்களால் மறைக்கப்படுகிறது. சாவர்க்கர் வாழ்க்கையில் இரண்டு தமிழர்களின் பங்கு முக்கியமானது. தமிழகத்தைச் சேர்ந்த எம்பிடி ஆச்சார்யா, விவிஎஸ் ஐயர் ஆகிய இருவரும் சாவர்க்கருடன் இணைந்து செயல்பட்டவர்கள். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்க காரணமான எம்பிடி ஆச்சார்யா உள்பட இரண்டு பேரை சாவர்க்கர் ஸ்பெயினுக்கு அனுப்பினார். யுத்த களத்தில் அவர்கள் போர் குறித்த தந்திரங்களை டெக்னிக் கற்றார்கள். வெடிகுண்டு தயாரிப்பது, போர் முறை உள்பட பல்வேறுவற்றை 8 மாதம் கற்றனர். பின்னர் லண்டன் சென்று சாவார்க்கரிடம் அறிக்கை சமர்பித்தனர். அதேபோல் காந்தி கொல்லப்பட்டது ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்ட போது, கோல்வார்க்கர், தமிழகத்தைச் சேரந்த பிரபல வழக்கறிஞரான டி. ஆர். வெங்கடராம சாஸ்திரியை அணுகிறார். டி. ஆர். வெங்கடராம சாஸ்திரி தான் ஆர். எஸ். எஸ்-சின் சட்டதிட்டங்களை உருவாக்கி, ஆர்.எஸ்.எஸ் மீதான தடைய நீக்க உதவினர். இப்படி ஆர்எஸ்எஸ் மற்றும் சாவார்க்கருக்கு மிகப்பெரிய பங்கு ஆற்றியவர்கள் தமிழர்கள், ஆனால் வெளிஉலகத்திற்கு தெரியாமல் போனது. அதேபோல் கருணை மனு என்ற வார்த்தையை மன்னிப்பு கடிதம் என மாற்றக்கூடிய திராவிட கட்சிகளின் மத்தியில் தான் நாம் வாழ்கிறோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்தவர்கள் கூட குடியரசுத் தலைவருக்கு கருணை மனு எழுதியிருந்தார்கள். சாவர்க்கர் எழுதிய மனுவை மன்னிப்புக் கடிதம் எனக்குறிப்பிட்ட ஒரு ஊடகங்கள் கூட அவர்கள் எழுதிய மனுவை மன்னிப்புக் கடிதம் எனக்குறிப்பிடவில்லை. இப்படித்தான் கருத்து திணிப்பு மற்றும் கருத்து திரிப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என சாவர்க்கர் ஆசைப்பட்டார். 2014ம் ஆண்டு இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள். இதன் மூலமாக சாவர்க்கரின் எண்ணம் நிறைவேறியுள்ளது" இவ்வாறு எஸ்ஜி சூர்யா பேசினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும் போது, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக, உணவுக்கூடங்களை திறந்தவர் சாவர்க்கர் என புகழ்ந்தார். மேலும், எந்த சித்தாந்தத்தை கொண்டவராக இருந்தாலும், வீர சாவர்க்கரை வெளிப்படைத் தன்மையோடு அணுக வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post