புத்தக கண்காட்சி-தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிப்பு- சீமான் பேச்சுக்கு கண்டனம்- மன்னிப்பு கேட்கனும்!

post-img
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைப் புறக்கணித்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைப் பாடியதற்காகவும் அரசியல் விமர்சனங்களை முன்வைத்ததற்காகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு புத்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்களான "பபாசி" அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்வுகளுக்காக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பபாசி வலியுறுத்தி உள்ளது. சென்னையில் பல லட்சக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக் கண்காட்சியில் பல்வேறு புத்தகங்கள் வெளியீட்டு விழாவும் நடைபெற்று வருகின்றன. இதேபோல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவும் புத்தகக் கண்காட்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசின் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்படாமல், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதற்காக கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. புத்தக கண்காட்சி நடத்தும் பபாசி அமைப்புக்கு அரசு அனுமதி தரக் கூடாது எனவும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் சென்னையில் பபாசி அமைப்பின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பபாசி தலைவர் சொக்கலிங்கம்: தன்னையும், பதிப்பகத்தையும் முன்னிலைப்படுத்துவதற்கு புத்தகக் காட்சியை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் பயன்படுத்தியுள்ளது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் விளக்கத்தைக் கேட்டு, அந்த பதிப்பகம் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் புத்தக வெளியீடுகளின் கட்டுப்பாடுகளை வரையறை செய்வோம். சீமானுக்கு கொள்கைகள் இருக்கும் ஆனால், இது பொதுவான மேடை, இங்கு பேசியதுதான் சிக்கல். சீமான் மேடை ஏறுவதற்கு முன்பே இது அரசியல் மேடை அல்ல; இலக்கிய மேடை; புத்தகங்கள் தொடர்பாக மட்டும் பேசுமாறு அறிவுறுத்தினேன். சீமானின் பேச்சுக்கு பபாசி கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. நீங்கள் அழைத்துவரும் நபர் அரசியல் பேசக் கூடாது என பதிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பபாசி பொதுச் செயலாளர் முருகன்: சிறப்பு விருந்தினராக வந்த சீமான், புத்தகம் பற்றி மட்டுமே பேசியிருக்க வேண்டும். புத்தக காட்சி பாதைக்கு நாங்கள் யார் பெயரை வேண்டுமானாலும் வைப்போம். இந்த விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகமும் உரிய மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த பதிப்பகம் திட்டமிட்டு இதனை நடத்தியுள்ளது. இதனிடையே சீமானை அழைத்து நிகழ்ச்சி நடத்திய டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் மன்னிப்பும் கேட்டுள்ளது. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சீமான் பேசியதில் துளியும் உடன்பாடு இல்லை.அதற்கான எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்கிறோம். புதுச்சேரி தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிபரப்பியதன் விளைவுகள் தெரியாமல் இருந்துவிட்டதால் மேடைக்காக அனுமதி பெற்றுக் கொடுத்ததால் அனைத்துக்கும் பொறுப்பேற்கிறோம். இதனால் மன வருத்தம் அடைந்துள்ள அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post