கோவை அவிநாசி மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி விபத்து நிகழ்ந்தது எப்படி?.. முழு விவரம் இதோ

post-img
கோவை: கோவை மாவட்டம், கணபதி பகுதியில் உள்ள கிடங்குக்கு எல்பிஜி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்த நிலையில் அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில் ரவுண்டானா சந்திப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.. கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கோவை மாவட்டம், கணபதி பகுதியில் உள்ள குடோனுக்கு ஒரு எல்.பி.ஜி. டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலையில் அந்த லாரி அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், ரவுண்டானா சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டவுடன் டேங்கர் லாரியில் இருந்து கேஸ் தொடர்ச்சியாக வெளியேறத் தொடங்கியதால் பதற்றம் தொற்றிக் கொண்டது. உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தீயணைப்புத் தறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து வாயு வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாநகரின் இதயப் பகுதி என்பதால் அவ்வழியாக வந்த பல்வேறு வாகனங்கள் மாற்று சாலைகளில் திருப்பி அனுப்பப்பட்டன. மேம்பாலத்தைச் சுற்றியிருந்த 500 மீட்டர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. விபரீதங்களைத் தடுக்கும் வகையில், அனைத்து சந்திப்புகளும் இரும்பு தடுப்புகளால் மூடப்பட்டன. தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 500 மீ தொலைவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார். சுமார் 11 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் டேங்கர் லாரி மீட்கப்பட்டு பாரத் கேஸ் பிளாண்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் மேம்பாலத்தின் வளைவில் திரும்பும்போது சற்று குறைந்த அளவீட்டில் வாகனத்தை திருப்பியுள்ளார். முன்பக்கமாக ஏறிச் சென்று திருப்பியிருந்தால் இந்த விபத்து நேரிட்டிருக்காது என்று கூறப்படுகிறது. இதனால், மேம்பாலம் இறங்கும் பகுதியில் உள்ள சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. 37 டன் கொள்ளளவு கொண்ட எரிவாயு டேங்கரில் 18 டன் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளதாக லாரியின் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த விபத்து நேரிட்ட சிறிது நேரத்திலேயே காற்றில் எரிவாயு கலப்பு குறித்த Explode detector வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில், சம்பவ இடத்தைச் சுற்றிலும் அதிக அளவிலான எரிவாயு காற்றில் கலந்திருப்பது தெரியவந்தது. எக்ஸ்பிளோட் டிடெக்டரில் சிவப்பு விளக்கு எரிந்ததையடுத்து 1 நிமிடத்தில் வாயு கசிவு நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. Resin hardner என்ற வேதிப்பொருளைக் கொண்டு கேஸ் கசிவு சரிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, விபந்து நிகழ்ந்த பகுதி, உப்பிலிபாளையம் மேம்பாலம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புகைப் பிடிக்கவும், தீப்பற்ற வைக்கவும் போலீசார் தடை விதித்தனர். மேலும் இப்பகுதியை சுற்றி 1 கிமீ தொலைவு வரை பொதுமக்களை வெளியேற்றும் பணி நடைபெற்றது. திருச்சியில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு டேங்கர் லாரி மீட்கப்பட்டது. இதுதொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலானாய்வு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுனர் ராதாகிருஷ்ணன் மீது BNS 281- ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், BNS 110 -மரணம் விளைக்கக்கூடிய விதத்தில் ஓட்டுதல் , BNS 324 (4) வாகனத்தை வேகமாக ஓட்டுதல், 9 B வெடிபொருள் சட்டம், 23 பெட்ரோலியம் சட்டம் , 8 R/W 15 சுற்று சூழல் சட்டம், 184 மற்றும் 190 மோட்டார் பாதுகாப்பு சட்டம் என 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தால் நேற்று ஒருநாள் முழுவதுமே கோவை மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அவிநாசி சாலை முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. வாகனத்தை ஓட்டுநர் அஜாக்கிரதையாக ஓட்டியதே விபத்துக்கான காரணம் என்று கூறி போலீஸார் கைது செய்துள்ளனர். இதுபோன்ற அபாயகரமான வாயுக்களை கொண்டு செல்வது கவனமாக எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். அவிநாசி சாலை மேம்பாலத்தின் வளைவில் திரும்பும்போது வேகமாகச் சென்றதாலும், கவனக் குறைவாலும் இந்த விபத்து நேர்ந்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post