பெங்களூருவில் கிடைத்தது அடி.. புனேவில் கிடைத்தது விருந்து.. மாஸ் காட்டும் டச்சு யூடியூபர்!

post-img
புனே: டச்சு யூடியூபர் ஒருவரை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று இந்திய முறைப்படி விருந்து வைத்த வீடியோ ஒன்று இணைய தளங்களில் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களைச் சுற்றிப் பார்த்து காணொளி வெளியிட்டு வரும் 'மேட்லி ரோவர்' என்ற யூடியூபர் இணைய உலகில் பிரபலமானவர். இவரது பெயர் பெட்ரோ மோட்டா. கடந்த ஆண்டு இந்த டச்சு யூடியூபர் இந்தியாவில் உள்ள தேசிய ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறினார். பெங்களூருவில் உள்ள ஒரு சந்தையை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த பெட்ரோவை, அங்குள்ள வியாபாரி ஒருவர் கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக ஒரு பொருளை விற்பனை செய்ய முயன்றார். அப்போது அந்தக் கடைக்காரர் இந்த வெளிநாட்டுப் பயணியைத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. வெளிநாட்டவர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது ஒட்டுமொத்த நாட்டிற்கே அவமானம் என நெட்டிசன்கள் பெட்ரோவை தாக்கிய வியாபாரியைக் கைது செய்யச் சொல்லிப் பதிவுகள் போட்டனர். பெங்களூரு காவல்துறை இணைய தளத்தில் புகாரைப் பதிவு செய்தனர். அதனால் நாடு முழுக்க பிரபலமானார் இந்த பெட்ரோ மோட்டா. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வைரலான இவர் இப்போது வரை இந்தியாவில் உள்ள பல மாநிலங்களைச் சுற்றிப் பார்த்து வருகிறார். தற்போது அவர் புனேயில் உள்ளார். அங்கே உள்ள ஒரு தாயும் மகளும் இந்த யூடியூபரை வீட்டுக்கு அழைத்துச் சென்று மனம் மயக்கும் இந்திய உணவைச் சமைத்துப் போட்டு விருந்து வைத்துள்ளனர். கடைவீதியில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த போது ரூபா என்ற இளம் பெண் அவரது தாய் வைஷாலியுடன் இந்த டச்சு யூடியூபரை சந்தித்தார். அப்போது அவரை வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று அவரது வீட்டு முகவரியை தேடிச் செய்தபோது ரூபாவின் தந்தை பைக்கில் வந்து பெட்ரோவை வரவேற்று அழைத்துச் சென்றார். மிக எளிமையான உள்ள வைஷாலி வீட்டிற்குச் சென்ற பெட்ரோவுக்கு பூரன் பூரி செய்வது விருந்து வைத்துள்ளார். இது மகாராஷ்டிரா உணவு வகை. இது ஒரு இனிப்பு வகையான பண்டம். கிட்டத்தட்டத் தமிழ்நாட்டில் செய்யப்படும் இனிப்பு போலி போன்றது. அதைத்தான் இந்த இந்திய தாயும் மகளும் டச்சுக்காரருக்கு செய்து கொடுத்தனர். இந்த யூடியூபருக்கு இந்திய உணவு வகைகளை அறிமுகம் செய்து வைத்து இந்தக் குடும்பத்தை உலகம் முழுக்க உள்ள பலரும் பாராட்டி வருகின்றனர். முன்பின் அறிமுகம் அற்ற வெளிநாட்டவரை இந்தளவுக்கு வீட்டுக்கு அழைத்து உபசரித்ததால் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த உணவு மிகவும் வித்தியாசமாக இருந்ததாகவும் வயிறு நிறைய மதிய உணவை உட்கொண்டேன் என்றும் அதை வழங்கிய இந்த அழகான குடும்பத்திற்கு நன்றி எனக் கூறியுள்ளார் இந்த டச்சு மனிதர். மேலும் வாழ்நாளில் மறக்க முடியாதவர்கள் இந்தக் குடும்பத்தினர் என்றும் அவர் மனதார பாராட்டி உள்ளார். பெங்களூரூவில் தன் மீது ஒரு வியாபாரி தாக்குதல் நடத்தியதற்காக முன்பே பெட்ரோ வடநாட்டில் வைரலானார். ஆங்கில ஊடகங்கள் இவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குரலை உயர்த்தினர். இப்போது அதே வடநாட்டின் ஒரு பகுதியாக உள்ள மகாராஷ்டிரா புனேவில் ஒரு குடும்பம் விருந்து வைத்து உபசரித்ததால் உலகம் முழுக்க இந்தியாவின் கெட்ட பெயரை மாற்றிக் காட்டி இருக்கிறார் பெட்ரோ. இந்தியாவில் அன்புமிக்க மக்களும் இருக்கிறார்கள் என்பதை அவர் இதன் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார். ஆகவேதான் இந்தளவுக்கு இந்த வீடியோ பேசு பொருளாக மாறியுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post