12 பி பஸ்.. திருட்டுத்தனமாக பார்த்த கமல் படம்..! இவ்வளவு ஜாலியானவரா ஷோபனா?

post-img
சென்னை:மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'தளபதி' படத்தில் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து நடித்த போது ஒரு பாடல் காட்சியில் இருவரும் தவறி கீழே விழுந்துவிட்டோம் என்ற தகவலை நடிகை ஷோபனா தனது பேட்டி ஒன்றின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். ரஜினிகாந்த்துடன் ஷோபனா சேர்ந்து நடித்த 'தளபதி' படம் 30 ஆண்டுகளைக் கடந்து இந்த மாதம் தான் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படம் மணிரத்னம் சினிமா வாழ்க்கையில் மட்டும் அல்ல; ரஜினி திரை வாழ்க்கையிலும் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. இந்தப் படத்தில் ஷோபனாவிடம் மம்மூட்டி 'உனக்கு சூர்யாவைப் பிடித்திருக்கா?' என்பார். அவரும் சம்மதம் சொல்வார். உடனே சாருஹாசனிடம் 'எப்போது கல்யாணம் வைத்துக்கொள்ளலாம்?' எனக் கேட்பார் மம்மூட்டி. அதற்கு சாரு, 'நான் செத்த அப்புறம்' என்பார். அந்த வசனம் இன்றுவரை ஹைலைட் ஆக பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் ஷோபனாவுக்கு அதிக வசனம் இல்லை. அவர் பயந்த சுபாவம் உள்ள ஒரு பெண்ணாகவே நடித்திருப்பார். பாதி காட்சிகளில் ஷோபனாவின் கண்கள்தான் பேசும். அவர் பரதநாட்டிய கலைஞர் என்பதால் கண்களை உருட்டியே காட்சிக்கு உயிர் கொடுத்திருப்பார். ஷோபனா தமிழில் நடித்ததைவிட மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மம்மூட்டியுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். இவரது மணிச்சித்ரதாழ் மலையாள சினிமாவில் ஒரு மைல் கல். இவர் பாக்யராஜுடன் நடித்த 'இது நம்ம ஆளு' படம் மிகப்பெரிய அளவில் இவருக்குப் பெயர் கொடுத்தது. இந்நிலையில் 'தளபதி' படம் பற்றிய நினைவுகளை ஷோபனா பகிர்ந்து கொண்டுள்ளார். அவரை டான்ஸ் மாஸ்டர் கலா சந்தித்து பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டி ஷோபனாவின் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. அதில் ஷோபனா, "ரஜினிகாந்துடன் இரண்டு படங்கள் நடித்திருக்கிறேன். முதலில் சிவா. அடுத்துத்தான் தளபதி. ஆகவே அவருடன் நல்ல பழக்கம் இருந்தது. நான் அப்போது சின்ன பெண். பெரிய அளவில் பயம் இல்லாமல் நடித்தேன். ஒரு பாடல் காட்சியை எடுக்கும் போதுதான் மேலே இருந்து நானும் ரஜினியும் விழுந்தோம். முதலில் அவர் விழுந்தார். அவர் மீது நான் விழுந்தேன். எனக்கு அடிபடவில்லை என்றாலும் அவருக்கு அடிபட்டது. ஆனால், அதை பெரியதாக அவர் கண்டுகொள்ளவில்லை. இன்றைக்குப் போல அன்று ஸ்டெண்ட் யூனிட் பாதுகாப்பு உபகரணங்கள் போட்டுக் கொண்டு படப்பிடிப்பு செய்யவில்லை. எது கிடைத்ததோ அதை வைத்து படம் எடுத்தார்கள்" என்று பேசி இருக்கிறார். தொடர்ந்து பேசிய ஷோபனா, "என் முதல் சம்பளம் 500 ரூபாய். ஆனால், அதை அம்மாதான் வாங்கி பையில் வைத்திருந்தார். அவருக்குத் தெரியாமல் அந்தப் பணத்தை யாரோ திருடிவிட்டார்கள். அதற்காக என் அம்மா அழுதார். 14 வயதில் நான் நடிக்க வந்தேன். 13 வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு வந்தது. அப்போது சில பாடங்கள் எனக்குக் கஷ்டமாக இருந்த நேரம். எனக்கு முன்பே சினிமா துறையில் என் உறவினர்கள் இருந்ததால், பெரிய தடைகள் இருக்கவில்லை. நடித்த படங்களும் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெற்றி பெற்றன" என்கிறார். இவர் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருந்தாலும் இன்றுவரை நட்புடன் இருக்கும் நடிகர்களின் பட்டியலில் முதலில் மோகன்லால் இருக்கிறார். அடுத்தது கமல்ஹாசன், மம்மூட்டி, ஜெயராம் என ஒரு சிறிய பட்டியலைச் சொல்கிறார் ஷோபா. நடிகைகளில் ரேவதி இவருக்கு ஒரு சகோதரி மாதிரி என்கிறார். அதேபோன்று சுஹாசினி. கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்தது பற்றிப் பேசி இருக்கும் ஷோபனா, "கமல்ஹாசன் 125 படங்களை நடித்து அனுபவம் பெற்றிருந்த காலத்தில் அவருடன் சேர்ந்து 'எனக்குள் ஒருவன்' படத்தில் நடித்தேன். அவரது பரம ரசிகை நான். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலேயே வீட்டுக்குத் தெரியாமல் 50 படங்களையாவது 12பி பஸ் பிடித்து மயிலாப்பூரிலிருந்து லஸ் கார்னர் போய் அங்குள்ள தியேட்டர்களில் கமல் படங்களைப் பார்த்திருக்கிறேன்" என்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post