எதிர்த்தவர்களுக்கு தோல்வியே பரிசு.. ஸ்டாலினை வரலாறு என்றைக்குமே வாழ்த்தும்! தங்கம் தென்னரசு புகழாரம்

post-img
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக வெள்ளி விழா நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் சிறப்புமிக்க பாலத்தை திறந்து வைத்த முதல்வரை வரலாறு என்றைக்கும் வாழ்த்தும் என்றார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக வெள்ளி விழா நடைபெறுகிறது. அதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்," குமரியில் எங்கு நோக்கிலும் தமிழர் கூட்டம் என்று பார்ப்போர் வியக்கும் வகையில் இந்த வெள்ளி விழா நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது. வரலாற்றினுடைய பாதையில் உலகெங்கும் எண்ணற்ற சிலைகள் நிறுவப்பட்டு இருக்கின்றன. உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்ட புரூட்டஸ் சிலை இன்றைக்கு இல்லை. ஆனால் கால வெள்ளத்தாலும், கடல் சீற்றத்தாலும் அழிக்க முடியாதவாறு ஓங்கி உயர்ந்து நிற்கக் கூடிய அய்யன் வள்ளுவன் சிலையை உருவாக்கிய பெருமை நம்மை எல்லாம் ஆளாக்கிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அமெரிக்கா நாட்டில் சுதந்திர தேவிக்கு என்று ஒரு சிலை உண்டு. அந்த 'Statue of Liberty' சிலை அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்டதல்ல. அது அமெரிக்காவுக்கு ஒரு கொடையாக பிரான்ஸ் நாட்டில் இருந்து கொடுக்கப்பட்டது. ஆனால் அய்யன் வள்ளுவன் சிலை நம்முடைய தொழில் நுட்பத்தை கொண்டு முழுக்க முழுக்க நம்முடைய நாட்டில் உருவாக்கப்பட்டது ஆகும். நம்முடைய முதல்வர் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு 'Statue of Wisdom' என்று பெயரிட்டு 'பேரறிவின் பெருஞ் சிலை' என புகழாரம் சூட்டியுள்ளார். திருக்குறளில் எந்த இடத்திலும் சிலை என்ற சொல் கையாளப்படவில்லை. ஓர் இடத்தில் மட்டும் வள்ளுவர் கல் நின்றவர் என்று சொல்லுகிறார். அது சிலையாக இல்லாமல் நடுகல்லாக ஒரு போர் வீரனுக்கு எழுப்பக் கூடியதாக பயன்படுத்தி இருக்கிறார். அதில் என் தலைவனை போர்க் களத்தில் எதிர்த்து நிற்கக் கூடிய எவரும் அதற்கு பரிசாக கல்லாக மாறி இருக்கக்கூடிய சூழ்நிலையை தான் பெற்றிருக்கிறார்கள். எனவே என்னுடைய தலைவனிடம் மோதுவதற்கு முன்பு யோசித்துக் கொள்ளுங்கள் என்கிறார். அதைப் போலவே தன்னை எதிர்த்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தோல்விகளையே பரிசாக அளித்த நம்முடைய முதல்வர் வள்ளுவன் சிலைக்கு கண்ணாடி இழை பாலம் அமைத்து இருப்பதன் மூலம் இந்தியாவிலேயே கடல் மீது கட்டப்பட்டுள்ள முதல் கண்ணாடி பாலத்தை திறந்து வைத்துள்ளார். விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கான கண்ணாடி இழை இணைப்பு பாலத்தை உருவாக்கிய சிறப்புமிக்க முதல்வரை வரலாறு என்றைக்கும் வாழ்த்தும் எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக வள்ளுவ மாலை பாடலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்‌ வெளியிட்டார். இந்த பாடல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளில் அமைக்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post