இவர்களுக்கும் மாதம் ரூ.1000.. புதுமைப் பெண் விரிவாக்க திட்டம் - மதுரையில் அமைச்சர் மூர்த்தி துவக்கம்

post-img
மதுரை: "புதுமை பெண் திட்டத்தின்மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவியரின் உயர்கல்வி உறுதி செய்யப்படுகிறது.. குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படும்.. பள்ளி, கல்லூரி இடைநிற்றல் விகிதம் குறையும்" என்று தமிழக அமைச்சர்கள் பெருமிதம் தெருவித்துள்ளனர். தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் "புதுமைப்பெண்" திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இதன் தொடக்க விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கியிருந்தார். விரிவாக்கம்: அப்போது முதல்வர் பேசும்போது, "இதை அரசுக்கு செலவினமாகக் கருதாமல், ஒரு தந்தைக்குரிய கடமையாக, பெண் குழந்தைகளுடைய கல்விக்கான மூலதனமாகப் பார்க்கிறேன். இந்த திட்டம் வந்த பிறகு மாணவிகள் கூடுதலாக கல்லூரிகளில் சேரத் தொடங்கி உள்ளனர். பெண்களின் படிப்புக்கு பணம் மட்டுமல்ல, எந்த தடை வந்தாலும் அதை உடைப்பேன். 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தில் 3.52 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு ரூ.143.41 கோடி வழங்கப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் "புதுமைப்பெண்" திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம். இத்திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க உள்ளோம்" என்று கூறியிருந்தார். முதல்வர் ஸ்டாலின்: தூத்துக்குடியில் முதல்வர் தொடங்கிய திட்டத்தை காணொளி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் பார்வையிடப்பட்டது.. இதையடுத்து, மாவட்டந்தோறும் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை அமைச்சர்கள் துவங்கி வைத்தனர். அந்தவகையில், மதுரையில் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். முதற்கட்டமாக அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்பட்டது. இதன் விரிவாக்கமாக நேற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவியருக்கும் வழங்கப்பட்டது.. மேலும், மதுரையில் 98 கல்லூரிகளில் படிக்கும் 5,509 மாணவிகளுக்கு திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். கிராமப்புற மாணவிகள்: அப்போது அமைச்சர் பேசும்போது, "கிராமப்புற மாணவிகள், ஏழ்மையில் இருக்கும் மாணவிகள் இத்திட்டத்தால் முன்னேற்றம் அடைந்துள்ளனர். திருமணமான பெண்களில் 40 சதவீதம் பேர் வேலைக்கு செல்கிறார்கள்.. கூலி வேலை பார்ப்போரும் தங்கள் பிள்ளைகளை பட்டதாரியாக்க விரும்புகிறார்கள்.. 30 வருடங்களுக்கு முன்பு, பெரிய அதிகாரிகள் துணை இருந்தால் வேலை கிடைத்துவிடும். இன்று நிலைமை மாறியுள்ளது. படிப்புக்கும் திறமைக்கும் தான் வேலை. 70 சதவீத பெண்கள் மேல்நிலைப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் கூடுதலாக பயன்பெறுவார்கள்.. டிஎன்பிஎஸ்சியே இதற்கு சிறந்த உதாரணம்" என்று பெருமிதம் தெரிவித்தார். திருப்பூர்: இதேபோல திருப்பூரில் அமைச்சர் கயல்விழி இந்த திட்டத்தை துவக்கி வைத்து பேசும்போது, "புதுமை பெண் திட்டத்தின்மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவியரின் உயர்கல்வி உறுதி செய்யப்படுகிறது.. குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படும்.. பள்ளி, கல்லூரி இடைநிற்றல் விகிதம் குறையும் என்றார். இப்படி மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு பார்வையின் மூலம் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சென்னை ஆவடியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post