தமிழர்களுக்கு சீனா கொடுத்த இலவச வீடுகள்..! வாங்க மறுக்கும் இலங்கை மீனவர்கள்.. ஏன்?

post-img
யாழ்ப்பாணம்: இலங்கை மீனவ மக்களுக்கு சீனா தற்காலிகமான வீடுகளை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் போர் அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களின் வாழ்க்கையை முழுமையாகப் புரட்டிப் போட்டது. அப்போது இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராசபக்ச அரசின் ராணுவம் பல ஆயிரக்கணக்கான தமிழர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றது. அவர்களின் நிலைமை என்ன என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. பலர் தங்களின் உறவுகளை இழந்து இப்போதுவரை அவர்களை தேடிவருகின்றனர். வீடு திரும்பாத ஆயிரக்கணக்கானவர்களின் நிலை பற்றி சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என அந்த நாட்டுத் தமிழர்கள் புதியதாக அமைந்துள்ள அநுர அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றன. அவரும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அளித்தே வெற்றி பெற்றுள்ளார். இந்த முள்ளிவாய்க்கால் போர் நடந்து போல லட்சக்கணக்கான மக்கள் முள்வேலிகளில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுப் பல துயரங்களை அனுபவித்தனர். அந்தப் போர் தமிழ்நாட்டு அரசியலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரும் நெருக்கடியாக மாறியிருந்தது. அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த திமுக அரசு போரைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை எனத் தமிழகத்திலிருந்த ஈழ ஆதரவு அரசியல் இயக்கங்கள் குற்றஞ்சாட்டினர். இந்தப் போர் நடந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்குச் சீனா, வீடுகளை அமைத்துக் கொடுத்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவை கான்கீரிட் வீடுகள் அல்ல. கண்டெய்னர் மூலம் தயாரிக்கப்பட்ட வீடுகள். பருத்திதுறையில் உள்ள மீனவ மக்களின் நலனைக் காக்க வேண்டி இந்த வீடுகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கண்டெய்னர் வீடுகள் நிரந்தரமானவை அல்ல; தற்காலிகமானவைதான். சுமார் 15 ஆண்டுகள் வரை தாங்கக்கூடிய அளவுக்கு வலிமையானவை. இந்த வீட்டில் ஒரு குடும்பம் வசிக்கக்கூடிய அளவுக்குச் சமையலறை மற்றும் வரவேற்பறை ஆகியவை உள்ளே அடங்கி உள்ளன. துருப்பிடிக்காமல் இருப்பதற்காக வேண்டி தரமான ஃபைபர் மூலம் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரியான வீடுகள்தான் அரபு நாடுகளில் வேலை செய்யப் போகும் இந்தியர்களுக்கு வழங்கப்படும். அதற்குள் நான்கு அல்லது 5 படுக்கைகள் போட்டுத் தங்கக்கூடியதாக இருக்கும். கடற்கரை ஓரமாக வாழும் மீனவ மக்கள் என்பதால் இந்த வீடுகள் புயல், மழைக்குக்கூடத் தாங்கக் கூடியதாக இருக்கும் என்கிறார்கள். இந்த வீட்டின் பாகங்கள் உதிரியாகச் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டு, இங்கே அப்படியே அதன் பாகங்களை இணைத்து உருவாக்கிவிடுகிறார்கள். அதற்கான உபகரணங்களைக் கூட இலவசமாகக் கொடுத்துள்ளனர். ஆனால், சில மீனவர்கள் இந்த வீட்டை வேண்டாம் என மறுத்தும் வருகின்றனர். அதற்குக் காரணம் இந்தத் தற்காலிக வீட்டைப் பெற்றுக் கொண்டால், நிரந்தர சிமெண்ட் வீட்டை இலங்கை அரசு கட்டிக் கொடுக்காமல் போகலாம் என்ற அச்சம்தான். இந்த வீட்டை நமது தேவைக்கு ஏற்ப இடம் மாற்றி வைத்துக் கொள்ள முடியும். வேறு இடத்திற்குக் கொண்டு செல்லவும் முடியும். ஒரு புறம் மட்டுமே கதவு கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஜன்னல்கள் உள்ளன. மேலும் உள்ளே சாதாரண வீடுகளில் உள்ளதைப்போல மின் இணைப்புகள் அனைத்தையும் வைத்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக மழையிலும் வெயிலிலும் குடிசை போட்டு வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் பலருக்கும் இது ஒரு தற்காலிகமான மன அமைதியைக் கொடுக்கும் என்கிறார்கள் பருத்தித்துறை மீனவ மக்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post