பிரசாந்த் கிஷோரின் சொகுசு வேன்.. விலை பல கோடியாமே.! உண்ணாவிரத போராட்டத்தில் வெடித்த சர்ச்சை!

post-img
பாட்னா: பீகாரில் போட்டித் தேர்வில் முறைகேடு நடந்ததாகச் சொல்லி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இதற்கிடையே போராட்டத்தின் போது அவர் பயன்படுத்த அங்கு நிறுத்தப்பட்டுள்ள சொகுசு வேன் தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். பீகார் மாநிலத்தில் கடந்த டிச. 13ம் தேதி நடந்த அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய தேர்வில் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தன. கேள்வித்தாள் லீக் ஆனதாகவும் தேர்வின் போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனப் புகார் எழுந்தது. பிரசாந்த் கிஷோர்: இதன் காரணமாக அந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கடந்த பல நாட்களாகவே அங்கு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை ஒடுக்கத் தடியடி எல்லாம் நடத்தப்பட்ட போதிலும், மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். இதற்கிடையே மாணவர்களுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் போராட்டத்தில் இறங்கியுள்ளார். பீகாரில் ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் மாணவர்களுக்கு ஆதரவாகச் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்குக் கீழே அமர்ந்து அவர் உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறார். கடந்த வியாழக்கிழமை தொடங்கிய முதல் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சொகுசு வேன்: பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இடையே அங்கு நிறுத்தப்பட்டுள்ள அவரது சொகுசு வேனிட்டி வேன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரவனை போல இருக்கும் இதில் தான் பிரசாந்த் கிஷோர் ஓய்வெடுப்பதாகச் சொல்லப்படுகிறது. பல கோடி மதிப்பிலான இந்த வாகனத்தில் ஏசி வசதி, தூங்கும், கழிப்பறை எனச் சகல வசதிகளும் இருக்கிறதாம். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஜன் சூராஜ் தரப்பில் இதற்குப் பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்த வேனில் என்ன பிரச்சினை எனக் கேள்வி எழுப்பியுள்ள ஜன் சூராஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விவேக், மாணவர்களின் எதிர்காலம்தான் இங்குப் பிரச்சினையாக இருக்கிறது என்றும் அதைப் பற்றித்தான் பேச வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், போராட்டத்தைத் திசை திருப்பவே திட்டமிட்டு இதுபோல அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரசாந்த் கிஷோர் விளக்கம்: பிரசாந்த் கிஷோரின் இந்த வெனிட்டி வேன் குறித்த சர்ச்சையைப் பெரிதாக வெடித்த நிலையில், அவரே இது தொடர்பான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நான் இங்கே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறேன். நான் கழிப்பறை பயன்படுத்த வீட்டுக்குச் சென்றால்.. அங்குப் போய் சாப்பிட்டுவிட்டேன் அல்லது தூங்கிவிட்டேன் என்பார்கள். இதன் காரணமாகவே வேனை பயன்படுத்துகிறேன். ரூ. 25 லட்சம் கொடுங்கள்: சிலர் இந்த வேனின் மதிப்பு ₹2 கோடி என்றும் இதற்கு ஒரு நாள் வாடகையே ரூ.25 லட்சம் என்றும் கூடச் சொல்கிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால்.. பேசாமல் இந்த வேனை எடுத்துச் செல்லுங்கள். அதற்குப் பதிலாக எனக்குத் தினசரி ரூ. 25 லட்சம் கொடுத்துவிட்டு, சின்ன கழிவறையை ரெடி செய்து கொடுங்கள்.. அதுவே போதும்..! மேலும் என்னைப் பார்த்து சொகுசு வேன் அது, இது எனக் கேட்போர் ஏன் பிரதமர் மோடி அல்லது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பயன்படுத்தும் வேன் குறித்து எதுவும் பேசுவதில்லை" என்று கேள்வி எழுப்பினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post