2026ல் தமிழக சட்டசபை செல்லும் கனிமொழி! பிறந்தநாளில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திமுகவில் சலசலப்பு

post-img
சென்னை: திமுக எம்பி கனிமொழியின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, தந்தை பெரியார் துணையோடு, திமுக கட்சிக் கொடியுடன் அண்ணா அறிவாலயத்தில் இருந்து தமிழ்நாடு சட்டப்பேரவை நோக்கி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைச்சூழ கனிமொழி செல்வது போல அந்த சுவரொட்டியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில், Way to 2026 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் எதிரிலும் ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டிகள் கனிமொழியை வாழ்த்துவதாக மட்டுமல்லாது கட்சியிலும், ஆட்சியிலும் அவருக்கான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் அமைந்திருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் கனிமொழிக்கு மாநில அரசியலில் அங்கம் வகிக்கும் வகையில் வாய்ப்புகள் வந்து சேராதா? என்ற அவரது ஆதரவாளர்களின் ஏக்கத்தின் வெளிப்பாடாகவும் இந்த சுவரொட்டிகள் அமைந்திருக்கின்றன. முன்னனுபவம் ஏதும் இல்லாத குறிப்பிட்ட சிலருக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 25 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் அனுபவம் உள்ள கனிமொழிக்கு, மாநில அரசியலில் இதுவரை எந்த வாய்ப்பும் வழங்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த சுவரொட்டிகளை அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ளது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது பிறந்தநாளான இன்று தனது அண்ணனும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அண்ணி துர்கா ஸ்டாலினை சந்தித்து கனிமொழி ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். இந்த நிலையில் இது போல் அவருடைய ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். தற்போது திமுகவில் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் உதயநிதி ஸ்டாலினை வைத்து நிர்வாகிகள் பார்க்கிறார்கள். சட்டசபையில் கூட முதல்வருக்கு வணக்கம் செலுத்துவதை போல் உதயநிதிக்கும் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் வணக்கம் செலுத்துகிறார்கள். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்து கனிமொழிதான் திமுகவை வழிநடத்துவார் என்ற அளவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளார்கள். இன்னும் சில இடங்களில் தலைவி வா, தலைமை ஏற்க வா , தூத்துக்குடி மக்களை காத்த மாதரசியே, திராவிடத் தீ, நாடாளுமன்றத்தை ஆளும் கலைஞரின வாரிசு, புறம் காத்தது போதும் அகம் காக்க வா, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அது போல் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலை எதிர்கொள்ளவிருந்த நிலையில் அறிவாலயம் முன்பு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அண்ணாவின் உணர்வு, கலைஞரின் பிறப்பு, தளபதியின் போர்வாள் என்ற தலைப்பிலான அந்த சுவரொட்டியில் கனிமொழி அமர்ந்திருந்த மேசையில் சென்னை மாநகராட்சி முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அதாவது சென்னை மேயராக கனிமொழியை அமர வைத்து அழகு பார்க்கும் வகையில் அமைந்திருந்தது அந்த சுவரொட்டி! கட்சியில் கூட அவர் தற்போது திமுக துணை பொதுச் செயலாளராக பதவி வகிக்கிறார். அவருக்கு அதை விட முக்கிய பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் கனிமொழி ஆதரவாளர்களிடம் உள்ளது. மறைந்த முதல்வர் கருணாநிதியின் மகள், முதல்வர் ஸ்டாலினின் தங்கை, இதையெல்லாம் தாண்டி, இலக்கியவாதி, சிறந்த அரசியல்வாதி, அரசியல் தெளிவு, ஆங்கிலப்புலமை, கண்ணியவாதி, பெண்ணியவாதி, பெரியார் சிந்தனைகளை முன்னெடுப்பவர் உள்ளிட்ட அடையாளங்கள் உள்ளன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post