கோவை: திமுக அரசை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போல் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்ட பாஜக நிர்வாகிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
கோவை அரசூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை ஆதரவாளர் ஒருவர் நேற்றைய தினம் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொண்டார். அப்போது அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தர்ம யுத்தம் நடத்துகிறார்.
இந்த யுத்தத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். இந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருப்போம் என கூறுகிறோம். இனி தமிழகத்தில் எந்த ஒரு பெண்ணுக்கும் இது போன்றதொரு மோசமான நிலை வரக் கூடாது என்பதற்காகத்தான் இந்த பிரார்த்தனை நடைபெறுகிறது. எல்லாரும் இந்த பிரார்த்தனையை செய்யுங்கள். வருங்கால தமிழகம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என கூறிய அந்த நபர் பச்சை வேட்டி அணிந்து கொண்டு வெறும் உடலில் அடித்துக் கொண்டார்.
அப்போது அவருடன் இருந்தவர்கள் வெற்றி வேல் வீரவேல் என முழங்கினர். இந்த நிலையில் அவ்வாறு சாட்டையால் அடித்துக் கொண்ட நபருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாட்டையால் அடித்துக் கொண்டதால்தான் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை. வேறு ஏதேனும் உடல்நல பாதிப்பு அவருக்கு இருந்ததா என்பது குறித்தும் தெரியவில்லை. அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, திமுக அரசை வரும் 2026 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்று வேண்டியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவருடைய வீட்டில் சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தை நேற்று நடத்தினார்.
பச்சை வேட்டி அணிந்திருந்த அவர் வெறும் உடம்பில் 7 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார். 8ஆவது முறை சாட்டையால் அடித்துக் கொண்ட போது அவரது ஆதரவாளர்கள் ஓடிவந்து பிடித்துக் கொண்டனர். அவருக்கு சாட்டையால் அடித்த இடத்தில் காயம் ஏற்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் அடுத்த 48 நாட்களுக்கு அவர் செருப்பு அணியாமல் இருக்க போவதாகவும் தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த சாட்டையடி போராட்டம் அரசியல் கட்சி தலைவர்களிடையே பெரும் கிண்டல் கேலியை ஏற்படுத்தியது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.