“வரலாறு என்னை கனிவுடன் நடத்தும்”.. மன்மோகன் சிங் நெஞ்சின் அடியாழத்தில் இருந்து சொன்ன அந்த வார்த்தை!

post-img
டெல்லி: “வரலாறு என்னை கனிவுடன் நினைவு கூறும்” என ஊடகங்களாலும், எதிர்க்கட்சிகளாலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அவர் வாழ்ந்த காலத்திலேயே, நாம் அவரது கூற்று பலித்ததைக் கண்டோம். 1990களின் தொடக்கத்தில் இந்தியா மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு வந்த நேரத்தில், நரசிம்மராவ் தலைமையிலான அரசில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார் மன்மோகன் சிங். இந்தியாவுக்கு மிகக் கொடுமையான காலகட்டமாக இருந்த நிலையில், மன்மோகன் சிங்கின் பொருளாதார அறிவை மெச்சியே, அவருக்கு நிதி அமைச்சர் எனும் மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. நம்பிக்கைக்கு ஏற்றபடி செயல்பட்டு, இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினார் மன்மோகன் சிங். அவர், பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதன் வாயிலாக இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருப்பதற்கு மன்மோகன் சிங் முதன்மைக் காரணம் என்றால் மிகையில்லை. 2004ஆம் ஆண்டில் யாரும் எதிர்பார்க்காதபடிக்கு, மன்மோகன் சிங், இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற போதும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, 2009லும் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றார். வெற்றிகரமாக 10 ஆண்டுகள் பிரதமராகப் பொறுப்பு வகித்தார் மன்மோகன் சிங். 2008-ல் உலகமே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்தியாவில் திறமையுடன் சமாளித்தார். மிகவும் அமைதியான குணம் கொண்டவர் மன்மோகன் சிங், அதிர்ந்து பேசாதவர். அவர் பேசமாட்டார்; அவர் செயல்பாடுதான் பேசும். அவரது அமைதியான குணம் காரணமாகவே, “மவுன”மோகன் சிங் என கிண்டல் செய்யப்பட்டார். பலவீனமான பிரதமர் என விமர்சிக்கப்பட்டார். ஆனால், விமர்சித்த பலரே, இப்போது மன்மோகன் சிங்கை வியந்து பாராட்டுகின்றனர். மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகளையும், அவரது அணுகுமுறையும் இன்றைக்கு பலரும் கொண்டாடுகின்றனர். 2014 ஜனவரியில், அதாவது, ஆட்சியை விட்டு வெளியேறுவதற்கு சில மாதங்கள் முன்பாக மன்மோகன் சிங் சொன்ன வாக்கியத்தை அன்றைக்கு அவ்வளவு முக்கியமான விஷயமாக பலரும் கருதவில்லை. "History will be kinder to me than contemporary media and opposition parties in Parliament" - “இன்றைய ஊடகங்களை விடவும் அல்லது நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை விடவும் வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்” என நெஞ்சின் அடியாழத்தில் இருந்து அன்றைக்குச் சொன்னார் மன்மோகன் சிங். அதன்பிறகு 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. அவர் வாழும் காலத்திலேயே, அவர் சொன்ன வாக்கியம் பலித்தது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரைக் கடுமையாக விமர்சித்த பலரும் கூட, அவரது பொருளாதார நடவடிக்கைகளை பின்னாளில் பாராட்டினர். அவர் தலைமையிலான ஆட்சியில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததைப் பாராட்டினர். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம், உணவு பாதுகாப்புச் சட்டம் என கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு பயன் அளிக்கும் எண்ணற்ற திட்டங்களை எந்தவித ஆரவாரமும் இன்றி செயல்படுத்தியவர் மன்மோகன் சிங் என மக்களும் கொண்டாடினர். 2014ல் மன்மோகன் சிங் சொன்ன வார்த்தை மெய்ப்பிக்கப்பட்டது. வரலாறு அவரை கனிவுடனே நடத்தியது. இன்றைக்கு, தனது 92 வயதில் விடைபெற்றுள்ளார் மன்மோகன் சிங். அவரது பணிகளை தேசம் என்றென்றும் நினைவு கொள்ளும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post