சபரிமலை: சபரிமலை கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கத்திலான ஐயப்பன் டாலர் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது திருவாங்கூர் தேவசம்போர்டு சார்பில் முறைப்படி வெளியாக உள்ளது.
கேரளாவில் பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் நடை திறந்து பூஜைகள் மேற்கொள்ளப்படும். பிறகு கார்த்திகை மாதத்தில் சபரிமலை சீசன் தொடங்கும்.
கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல மாநில பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
பொதுவாக கார்த்திகை மாதத்தில் வரும் மண்டலகால பூஜை அதன்பிறகு வரும் மகரவிளக்கு பூஜை நாளில் ஏராளமான ஐயப்ப சாமி பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருவார்கள். அதன்படி சபரிமலை ஐயப்பன் சாமி கோவிலில் மண்டலகால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மண்டலகால பூஜைகள் டிசம்பர் 27 ம் தேதி முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு 2025 ஜனவரி மாதம் 15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு திருவாங்கூர் தேவசம் போர்டு குட்நியூஸை சொல்லி உள்ளது. அதாவது சபரிமலை கோவிலில் விரைவில் தங்கத்திலான ஐயப்பன் டாலர் என்பது விற்பனை செய்யப்பட உள்ளது. இதுதொடர்பான இன்று திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு தேவசம்போர்டு சார்பில் முறைப்படி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முதற்கட்ட தகவலின்படி திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சபரிமலையில் தங்கத்திலான ஐயப்பன் டாலர் விற்பனை செய்ய ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஒரு கிராம், 2 கிராம், 4 கிராம், 6 கிராம், 8 கிராம் என்ற எடையில் தங்கத்தினால் செய்யப்பட்ட சபரிமலை ஐயப்பன் டாலர்களை விற்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு இந்த டாலர்களை தயாரித்து வழங்க பல்வேறு நகை கடைக்காரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். டெண்டர் முறையில் டாலர் உற்பத்தி செய்யும் பணி வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இதுபற்றி தேவசம் போர்டு உறுப்பினர் அஜித் குமார் கூறுகையில், ‛‛ஐயப்பன் சாமியின் டாலர் விற்பனை என்பது தேவசம் போர்டின் சில்வர் ஜூபிளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வழங்கப்பட உள்ளது. இந்த டாலர் ஒரு கிராம் முதல் 8 கிராம் வரை இருக்கும். டாலர் தயாரித்து வழங்க பல்வேறு ஜூவல்லரிகள் இடையே கடும் போட்டி உள்ளது'' என்றார்.
அதோடு மகர விளக்கு சீசன் முடிவதற்குள் இதனை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது. சபரிமலை கோவிலில் தங்கத்தில் செய்யப்பட்ட ஐயப்பன் டாலர் விற்பனை செய்யப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக 1980ல் சபரிமலையில் டாலர் விற்பனை தொடங்கியது. கடைசியாக 2011-12 காலக்கட்டத்தில் அதாவது 12 ஆண்டுகளுக்கு முன்பு டாலரின் ஒருபுறம் சில்வரில் ஐயப்பன், இன்னொரு புறம் தங்க முலாம் பூசிய விநாயகர் படத்துடன் டாலர் வழங்கப்பட்டது. அப்போது அதன் விலை என்பது ரூ.500 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகு ஐயப்பன் டாலர் விற்பனை என்பது நிறுத்தப்பட்டது.
இப்போது கேரளாவில் குருவாயூர் கோவிலில் சாமி படம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளி டாலர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை பின்பற்றி மீண்டும் சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.