ஊட்டி: மலைப்பகுதிகளிலேயே நடந்த முதல் விமான விபத்து பற்றி தெரியுமா? 1950-ம் ஆண்டு, நீலகிரி மலையில் இப்படியொரு மோசமான விபத்து நடந்துள்ளது.. நாளை அதாவது டிசம்பர் 13ம்தேதி, விமான விபத்து நிகழ்வின் 74வது ஆண்டு நினைவுதினமாகும். நம்முடைய ஒன் இந்தியா வாசகர்களுக்காக, இந்த விபத்து குறித்து விவரிக்கிறார் நீலகிரி ஆவணக் காப்பக மையத்தின் இயக்குநர் தர்மலிங்கம் வேணுகோபால்.
ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான டக்லஸ் மாடல் சி-47பி விமானம், சென்னையிலிருந்து புறப்பட்டது.. இந்த விமானம் திருவனந்தபுரம் செல்ல வேண்டியது. அதற்கு முன்பு பெங்களூரு, கோவை சென்று அதன்பின் இறுதியாக திருவனந்தபுரம் செல்லும். பெங்களூருவிலிருந்து புறப்பட்டு, கோவையில் தரையிறங்க நெருங்கி கொண்டிருந்தது.
விமானம்: விமானத்தை கேப்டன் ஆன்ட்ரூ வைஸ்மேன், துணை விமானி ராம்நாத் நாராயண் அய்யர், ரேடியோ அதிகாரியாக காசர்கோடு அப்பு ஷெனாய் இவர்கள் 3 பேருமே கோவை கன்ட்ரோல் ரூமை தொடர்பு கொண்டபடி வந்தனர். தரையிறங்க வெறும் 12 நிமிடங்களே இருந்தபோது, திடீரென கட்டுப்பாறை அறையின்தகவல் தொடர்பிலிருந்து விமானம் திடீரென துண்டிக்கப்பட்டது.
அந்த நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் கில் கோத்தகிரி அருகே கடுமையான பாறைகளில் மோதி விமானம் வெடித்து சிதறியது..
மொத்தம் 16 பேர் விமானத்தில் இருந்தனர்.. இதில் 7 பேர் வெளிநாட்டுக்காரர்கள்.. விமானத்திலிருந்த மொத்த பேருமே இறந்துவிட்டனர்.
பனிக்காலம்: வழக்கமாக டிசம்பர் மாதம், நீலகிரியில் மிக மோசமான வானிலை நிலவும்.. கடுமையான உறைபனியும், மழையுமாக கொட்டிக்கொண்டிருக்கும் தருணம், இப்படியொரு விமான விபத்து அன்று நடந்துவிட்டது..
ஆனால், கோவை அப்சர்வேட்டரி சார்பில் அனுப்பப்பட்ட எச்சரிக்கை அறிக்கையில் அதாவது ஆபத்தான மேகக்கூட்டங்கள் இருப்பது குறித்த எச்சரிக்கை சென்னைக் கட்டுப்பாட்டு அறைக்கு காலை 10.40மணிக்குத்தான் கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பாகவே விமானம் விழுந்து நொறுங்கிவிட்டது. விமானம் விழுந்த பகுதியானது, அடர்ந்தியான காடுகள் நிறைந்த பகுதி.. காட்டெருமைகள் உள்ளிட்ட ஆபத்தான மிருகங்கள் நிறைந்தபகுதி.. இந்த காட்டுக்குள் செல்வது எளிதான காரியமல்ல.
சிக்கல்கள்: நூற்றுக்கணகன்ன ராணுவ வீரர்களும், போலீஸ் படையனிரும் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்.. கடும் பனியும், மழையிலும் தேடுவது சிரமத்தை தந்தது.. இந்த சிக்கல்களுக்கு நடுவில், விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களும் விஷயத்தை கேள்விப்பட்டு கோத்தகிரிக்கு வந்துவிட்டார்கள்.
இந்த சமயத்தில், விபத்து குறித்த நிறைய புரளிகளும் பரவ தொடங்கிவிட்டன.. 'இங்குதான் விழுந்தது, அங்குதான் சத்தம்' கேட்டது என்று ஆளுக்கொருத்தர் யூகங்களை சொன்னார்கள். எனவே, ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் தூரத்துக்கு விமானத்தை தேட வேண்டியதாகிவிட்டது. மேற்கு தொடர்ச்சி மலையின் இரு பகுதிகளிலும் தீயாய் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. ஆனாலும் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இந்த விமான விபத்து நடந்தது கோத்தகிரி என்றாலும், கோத்தகிரியில் இருந்தே உள்ளே செல்வதற்கு 2 நாள் ஆகும். இறுதியில், விமானத்தை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 500 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று ராணுவத்தினர் அறிவித்தனர். இதற்காக நீலகிரி முழுவதும், ராணுவ விமானத்தில் நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன.
2 பேர்: இறுதியில் 6வது நாள், அங்கிருந்த வனதுறை காவலர், துணி வெளுக்கும் நபர் என இவர்கள் 2 பேரும்தான் விமானத்தை கண்டுபிடித்தனர். ஆனால், விமானம் நொறுங்கி விழுந்த இடத்திற்கு நடந்து செல்ல முடியாது. மலையில் ஊர்ந்து மட்டுமே செல்ல முடியும்.. அப்படித்தான் ராணுவத்தினர் ஊர்ந்து ஊர்ந்தே அந்த சம்பவ இடத்தை அடைந்தனர். அங்கே லட்சக்கணக்கான துண்டுகளாய் விமானம் சிதறிக்கிடந்துள்ளது. சடலங்கள் மழையில் அழுகி கிடந்துள்ளன.. யாருமே அடையாளம் தெரியவில்லை.
சென்னையை சேர்ந்த விமான பணிப்பெண் ஒருவர், தன்னுடைய ஹேண்ட்பேக்கை கையால் பிடித்தபடியே இறந்துள்ளதை வைத்து அடையாளம் தெரிந்தது. ஸ்விட்சர்லாந்து பயணி ஒருவர் தன்னுடைய நெஞ்சிலேயே, டைரி ஒன்றை பிடித்தபடி இறந்துள்ளார். மற்றவர்கள் யாரையுமே அடையாளம் தெரியவில்லை. விமானத்தில் பல முக்கிய தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் இருந்துள்ளனர். இந்த விபத்தில் உலகப்புகழ்பெற்ற புள்ளியில் வல்லுநர் ஒருவரும் இறந்துவிட்டார்.
புள்ளியியல் நிபுணர்: அவரது பெயர் ஆப்ரஹாம் வால்ட் ஆகும்.. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் பேராசிரியராக இருந்தவர்.. இந்திய அரசு சார்பில் விருந்தினராக அப்போது பேராசிரியர் வால்ட் அழைக்கப்பட்டிருந்தார். திருவனந்தபுரத்தில் உரை நிகழ்த்துவதற்காக மனைவியுடன் இந்த விமானத்தில் வந்துள்ளார்..இருவருமே விமானத்தில் இறந்துவிட்டனர். 2-ம் உலகப் போரில் வெல்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தவர் இந்த வால்ட்தான்.
ஹிட்லரை தோற்கடிக்க, எத்தனையோ போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியும், அதிலிருந்து எளிதாக தப்பித்து கொண்டிருந்தார் ஹிட்லர். அப்போதுதான் குழம்பி போன அமெரிக்கா, ஆபிரகாம் வால்டின் உதவியை நாடியது.
லாஜிக்: "மாறுபட்ட திங்கிங்" என்று சொல்லக்கூடிய புதிய லாஜிக்கை கண்டுபிடித்து சொல்கிறார் வால்டின். அதன்படியே அமெரிக்கா விமான தாக்குதலை நடத்தி, அதில் வெற்றியும் கண்டது. அந்தவகையில், ஹிட்லரை வீழ்த்த காரணமாக இருந்தவர்தான் இந்த ஆபிரஹாம் வால்டின். இவரது லாஜிக் & தியரிதான் இன்றுவரை ஷேர் மார்க்கெட்ங்குகளிலும், தொழில்துறைகளிலும், மிகப்பெரிய வணிக நிறுவனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கோத்தகிரி விபத்து இந்தியாவையே அன்று மிகப்பெரிய அளவில் உலுக்கிவிட்டது. இறுதியில், பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.. இது தொடர்பான விசாரணைக்குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டது. ஒரு வருடம் இந்த விசாரணையும் நடந்தது.. இறுதியில், பைலட்டின் தவறு காரணமாகவே விபத்து நடந்ததாகவும், அதிக பனி மூட்டம் காரணமாக, கண் தெரியாமல் 6000 அடி உயரத்தில் பாறையில் விமானம் மோதியதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கோரிக்கை: மலைப்பிரதேசங்களிலேயே நடந்த முதல் விபத்து இதுவென்பதால், இன்றுவரை நீலகிரி மக்களால் இந்த விபத்தை மறக்க முடியாது. இந்த விபத்து சம்பவத்தை நினைவுகூரும்வகையில், கோடநாடு பகுதியில் ஒரு நினைவுச்சின்னம் வைக்க வேண்டும் என்பதும் நீலகிரி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது" என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டார் வேணுகோபால் தர்மலிங்கம்.