டெல்லி: 2013ல் சென்னையில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் உள்பட 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் 9 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தவர் சுப்பையா. இவர் நரம்பியல் நிபுணர். இவர் கடந்த 2013ம் ஆண்டு சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். மர்மநபர்கள் அவரை வெட்டி கொலை செய்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சொத்து பிரச்சனையில் டாக்டர் சுப்பையாவை வெட்டி கொன்றது தெரியவந்தது.
இந்த வழக்கில் கைதான 9 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. சுப்பையாவின் உறவினரான அரசுப்பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மகன்கள் வழக்கறிஞர் பாசில், பொறியாளர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் முருகன், செல்வப்பிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு கடந்த 2021ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து அவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, சுப்பையாவின் மனைவி சாந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில் அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்தது ஏற்க முடியாதது. இதுபோன்ற தீர்ப்பை இதுவரை பார்த்ததில்லை. எனவே இந்த மேல்முறையீட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் 4 வார காலத்தில் பதிலளிக்க வேண்டும்'' என நோட்டீஸ் பிறப்பித்து கடந்த மாதம் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அதாவது விடுதலை செய்யப்பட்ட 9 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதோடு வரும் 20ம் தேதி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.