சென்னை: எம்ஜிஆர் சொன்ன அறிவுரையை கேட்டிருந்தால் இன்று எப்படியெல்லாமோ ஜொலித்திருக்கலாமே! 100 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் பெயர் சொல்லும் படி நல்ல ரோல் அமையாதவர்தான் இந்த நாகராஜ சோழன்! அப்படி அவருக்கு எம்ஜிஆர் என்ன அறிவுரை சொன்னார் என தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆரை எந்த நடிகர் சந்தித்தாலும் அந்த நடிகருக்கு ஒரு அட்வைஸை நிச்சயம் சொல்வார். அது தான் "உடம்பை கட்டுக்கோப்பா வச்சுக்கங்க. எக்சர்சைஸ் பண்ணுங்க"...
அப்படி எம்.ஜி.ஆர், இரண்டு நாகராஜ சோழன்களுக்கு அறிவுறுத்தி சொன்னார். அதில் ஒருத்தர் தான் நடிகர் நாகராஜசோழன் (என்.ஆர்.).
நாகராஜ சோழனை முதன் முதலில் பார்த்தது ரஜினி படத்தில் தான். 'என் கேள்விக்கென்ன பதில்' படத்தில் கர்ப்பிணி ஸ்ரீப்ரியாவையும், ரஜினியையும் போலீஸ் கூட சேர்ந்து துரத்துவார்.
கடைசியா பார்த்த படம் 'தேவர் மகன்'. இதில் வெள்ளக்காடாகி கிராமமே துக்கத்துல விழ காரணமான நாகராஜசோழனை கமல் துரத்துவார். நாகராஜ சோழன் ஓடுவார். நாகராஜசோழன் 'எதிர் வீட்டு ஜன்னல்' படப்பிடிப்பை ஒரு இடத்தில் நடத்தும் போது முதல்வர் எம்.ஜி.ஆர் அங்கு அலுவல் விஷயமாக வந்திருக்கிறார். கலைஞானம் எம்ஜிஆர் நண்பர் என்பதால் பார்க்க சென்றிருக்கிறார்.
படப்பிடிப்புக் குழுவை சந்தித்த எம்.ஜி.ஆரிடம் நாகராஜ சோழனை வில்லனாக நடிக்கவிருப்பதாக அறிமுகம் செய்து வைக்கிறார் கலைஞானம். எம்.ஜி.ஆர் அப்போது நாகராஜசோழனிடம் அறிவுரை சொன்னது இது தான். "நடிகனுக்கு உடல் முக்கியம். அதனால் உடற்பயிற்சி செய்து உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்". வழக்கமான ஆனால் முக்கியமான அறிவுரையை சொல்லி அனுப்புகிறார்.
நாகராஜசோழன் கரடுமுரடான முகம் கொண்டவர். வில்லனின் கையாளாக அவர் நடித்த படங்கள் ஏராளம். நல்ல நடிப்புத் திறமை உடையவர். மோகன்லாலின் நாடோடிக் காற்று தமிழில் கதாநாயகன் என வந்த போது நாகராஜ சோழனும், இன்றைய யூடியூப் பயில்வான் ரங்கநாதனும் பாண்டியராஜன்-எஸ்.வி.சேகர் ஜோடியை கண்டு சிஐடிகள் என மிரண்டு ஓடுவது செம கிச்சுகிச்சு சீன் அப்போது.
மைக்கேல் மதனகாமராஜனில் தீயணைப்பு வீரர் கமல் நண்பனாக மயில்சாமியுடன் நாகராஜசோழன் நடித்திருப்பார். சின்னப்பதாஸ் படத்தில் கேப்டன் ராஜுவின் அடியாட்களில் ஒருவர். குரு சிஷ்யனில் பாண்டியனுடன். திராவிடன் படத்தில் போலீஸ். தேவர் மகனில் இவர் பாத்திரம் செய்யும் காரியத்தால் கமல் கேரக்டருக்கு கிராமத்தின் மேல் பரிதாபம் தோன்றும்...
இப்படி சில்லறை ரோல்களில் வந்த நாகராஜசோழனுக்கு அழகான சென்டிமெண்ட் ரோல் கொடுத்தார் டி.ராஜேந்தர். மைதிலி என்னை காதலி படத்தில் அமலா வீட்டு காவல்காரன் நாகராஜசோழன். ஆனால் வாய் பேச முடியாதவர். டி.ஆர் காதல் தோல்வியால் 'பொன்னான மனசே பூவான மனசே வக்காதே பொண்ணு மேல ஆச' எனப்பாடும் போது நாகராஜசோழன் அழுதுவிடுவார்.
சக காவலர் அவரை ஏன்டா ஊமை அழறேன்னு கேட்டதும் ஒரு பேப்பரில் எழுதி தருவார். 'நானும் ஒரு பெண்ணை காதலித்தேன். நான் ஊமை என்பதால் அவள் விட்டுப்போயிட்டா. நானும் காதலில் தோற்றவன்' என இருக்கும். "ஊமை கனவு கண்டா ஊருக்கெல்லாம் தெரியாதுன்னு சொல்வாங்க. இவ்வளவு நாள் உன் கூடவே இருந்து இது தெரியாம போயிடுச்சே...." என சக காவல்காரர் பரிதாபப்படுவார்.
தியேட்டரே கைதட்டலில் அதகளப்படுத்திய சீன் அது. க்ளைமேக்ஸில் அமலாவை தூக்கிக் கொண்டு போனதும் நாகராஜசோழன் ஓடிவந்து சைகை பாஷையில் துடிதுடித்து காப்பாற்றச் சொல்லுவார். துணிவே தோழன் முதல் மௌனம் சம்மதம், குருசிஷ்யன் என எத்தனையோ நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தும் இவருக்கு பெயர் சொல்லும்படியான ரோல் அமையவில்லை. ஆனால் யார் இவர் என கேட்க வைத்தவர்.
எம்.ஜி.ஆரின் அட்வைஸை கேட்டாரோ இல்லையோ நாகராஜ சோழன் ஒரு நாள் மாரடைப்பு வந்து மறைந்து போனார். மறக்க முடியாதவர். எம்.ஜி.ஆரின் அட்வைஸை கேட்டு அதுபடியே உடற்பயிற்சி செய்து இன்றும் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் அந்த இன்னொரு நாகராஜ சோழன் யார் தெரியுமா? வேறுயாருமல்ல. அமைதிப்படை அமாவாசை நாகராஜ சோழன் சத்யராஜ் (எஸ்.ஆர்.) தான். எம்ஜிஆர் கிட்டயே கர்லாக் கட்டையை வாங்கிட்டு வந்தவராச்சே..... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.