கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு.. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

post-img
டெல்லி: கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. சிபிஐ விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்து இருந்தது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் பர்தீவாலா, மகாதேவன் அமர்வு இன்று விசாரிக்கிறது. கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி கள்ளச் சாராயம் குடித்த 68 பேர் உயிரிழந்தனர். சுமார் 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 68 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விஷசாராய வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. எனினும், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்ப துரை, பாமக செய்தி தொடர்பாளர் கே.பாலு, பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ வால்பாறை டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. சாராய வியாபாரத்தை போலீசார் முளையிலேயே கிள்ளி இருந்தால், 68 பேர் பலியாகி இருக்கமாட்டார்கள். இந்த விஷசாராய விவகாரத்தில் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அதனால், சிபிசிஐடி போலீசாரால் திறமையாக விசாரணை நடத்த முடியாது. அதுமட்டுமல்ல சாராய விற்பனையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் தங்கள் வழக்கிற்கு தாங்களே நீதிபதியாக இருக்க முடியாது. எனவே, கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. 2 வாரங்களுக்குள் வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும்" என்று ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- தமிழக சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை சரியாகத் தான் விசாரித்து வந்தனர். கள்ளச் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கை சிபிஐ மீண்டும் விசாரித்தால், விசாரணை இன்னும் தாமதமாகும். எனவே, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இடைக்கால தடை விதிக்கவும் வேண்டும்"என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என பாமக, பாஜக, அதிமுக வழக்கறிஞர்கள் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Post